Last Updated : 09 Dec, 2016 08:56 AM

 

Published : 09 Dec 2016 08:56 AM
Last Updated : 09 Dec 2016 08:56 AM

விரைவில் வருகிறது ‘காவலன் சாப்ட்வேர்’: செல்போன் பட்டனை அழுத்தினாலே போலீஸ் வரும்

காலத்துக்கு ஏற்ப குற்றங்களின் தன்மை மாறுகிறது. இதனால், குற்றங்களைக் குறைக்கவும், முற்றிலும் தடுக்கவும் தொழில் நுட்பத்தின் உதவியை போலீ ஸார் நாடுகின்றனர். ஆரம்பகாலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் சென்று எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கும் நடைமுறை இருந்தது. இதன் மூலம் எல்லாம் நடந்து முடிந்த பிறகே போலீஸார் உதவி செய்ய முடிந்தது.

இதைத் தொடர்ந்து காவல் கட்டுப் பாட்டு அறை உருவாக்கப்பட்டது. ஆபத்தின் விளிம்பில் இருப்பவர்கள் தங்களது போனில் இருந்து ‘100’ என்ற இலவச எண்ணுக்கு அழைத்தால், போலீஸார் நேரடியாக சம்பவ இடத் துக்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுத்தனர். இதன்மூலம் இந்தியா முழுவதும் காவல் நிலையத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் கடந்த ஆண்டு போன் மூலம் 66 லட்சத்து 12 ஆயிரத்து 76 அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை 2 லட்சத்து 21 ஆயிரத்து 661 பேர் இந்த எண்ணில் தொடர்பு கொண்டுள்ளனர்.

அபாயத்தின் உச்சத்தில் இருப்பவர்கள், காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணை டயல் செய்வதற்குள் எல்லாம் முடிந்துவிட வாய்ப்பு இருக்கிறது. அதனால் இதற்கு மாற்றாக புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்த சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தலைமை இடத்து கூடுதல் காவல் ஆணையர் எஸ்.என் சேஷசாயி, காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் எஸ்.மணி மேற்பார்வையில், ‘காவலன் சாப்ட் வேர்’ என்னும் புதிய தொழில் நுட்பம் தயாராகி வருகிறது.

இந்த சாப்ட்வேர் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இப்போது தயாராகும் புதிய சாப்ட்வேர் அனைத்து ஆன்ட்ராய்டு செல்போன்களிலும் பதிவிறக்கம் செய்யும் வகையில் இருக்கும். பதிவிறக்கம் செய்தவர்கள் தங்களின் செல்போன்களின் ஏதாவது ஒரு பட்டனை ஆபத்து நேரங்களில் அழுத்தினால் போதும், அந்த இடம் எங்கு உள்ளது என்பது உட்பட அனைத்து தகவல்களும் தெரிந்துவிடும். போலீஸார் அங்கு விரைந்து வந்து விடுவார்கள்.

மேலும் ஒரு கூடுதல் சிறப்பு அம்சமாக, தற்போது அறிமுகமாக உள்ள தொழில் நுட்பத்தின் மூலம் நீங்கள் பட்டனை அழுத்திய உடன் செல்போனில் உள்ள கேமரா தானாகவே இயங்க ஆரம்பித்து விடும். அலறல் ஒலியும் தெளிவாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் எதிரிகளிடம் எந்த வகையில் சிக்கிக் கொண்டுள்ளார்கள் என்பது போலீஸாருக்கு தெரிந்து விடும். இதன் மூலம் போலீஸார் பிரச்சினையை உன்னிப்பாக கவனித்து விரைந்து வர உதவியாக இருக்கும். இந்த வகை புதிய தொழில் நுட்பத்தை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் விரைவில் அறிமுகப் படுத்தி வைக்க உள்ளார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x