Last Updated : 30 Dec, 2016 11:57 AM

 

Published : 30 Dec 2016 11:57 AM
Last Updated : 30 Dec 2016 11:57 AM

கவலைக்கிடமாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை: அரசு, மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள் அலட்சியத்தால் தொடரும் அவலம்

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட கடலோர மக்களின் கலங்கரை விளக்கமாக விளங்கிய பட்டுக்கோட்டை அரசுப் பொது மருத்துவமனை, படிப்படியாக மக்களின் நம்பிக்கையை இழந்து, தீவிர சிகிச்சையை எதிர்நோக்கும் நோயாளியைப் போல கவலைக்கிடமாக உள்ளது என்றால் அது மிகையல்ல.

தற்போது, பல்வேறு கட்டிடங்களில் 202 படுக்கைகளுடன் செயல்படும் இந்த மருத்துவமனைக்கு, நாளொன்றுக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். பெரும்பாலும் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்களே வருகின்றனர்.

மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த முத்துப்பேட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம், சேதுபாவாத்திரம், திருவோணம், கட்டுமாவடி, மீமிசல், கோட்டைப்பட்டினம், கறம்பக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையையே நம்பியுள்ளனர். சென்னை- கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை சாலை (ECR) இந்த வழியே செல்வதால், அதிகமான விபத்துகள் ஏற்படும் பகுதியாகவும் உள்ளது. அதிகமான மீன்பிடி துறைமுகங்களும் உள்ளதால், அதைச் சேர்ந்த மீனவர்களும் இந்த மருத்துவமனையையே நம்பியுள்ளனர். ஆனால், அவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கும் வகையிலேயே இந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் உள்ளன. உள்நோயாளிகள் அனுமதிச் சீட்டு தருவதிலிருந்து, அறுவை சிகிச்சை வரை அனைத்துக்கும் கட்டணம் நிர்ணயித்து கட்டாய வசூல் செய்வதாகக் கூறப்படுகிறது.

அவசர சிகிச்சைப் பிரிவு…

நுழைவு வாயில் எதிரில் உள்ள கட்டிடத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, கட்டு போடுமிடம், ஊசி போடுமிடம், ஆய்வகம் உள்ளிட்ட அனைத்தும் மிகச்சிறிய அறைகளில் செயல்படுவதால், எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் பெரும்பாலும் அங்கு இல்லாததாலும், உரிய வசதிகள் இல்லாததாலும், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை 55 கி.மீ. தொலைவில் உள்ள தஞ்சாவூருக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால், போகும் வழியிலேயே பலர் உயிரிழந்துள்ளனர். அண்ணா வார்டு இடநெருக்கடியில் உள்ளது.

குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு சிறிய அறையில் இருளடைந்து, கட்டில்கள், மெத்தைகள் சிதைந்து கிடக்கிறது. கொசுக்கடி, வியர்வையால் குழந்தைகள், தாய்மார்கள் அவதிப்படுகின்றனர். ஜவான் வார்டு யாரும் இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. மற்ற வார்டுகளின் நிலைமையும் சுமாரான நிலையிலேயே உள்ளன. ‘சீமாங்க்’ மையம் மட்டும் சிறப்பாக செயல்படுகிறது. அதிலும், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்ற குறை உள்ளது. தீவிர இதய சிகிச்சைப் பிரிவும் தற்போது பராமரிப்புக்காக மூடப்பட்டுள்ளதால், இதய நோயாளிகளின் பாடு திண்டாட்டமாகியுள்ளது.

இந்த மருத்துவனைக்கு நீண்ட காலமாக நிரந்தர மயக்க மருந்து மருத்துவர்கள், அதற்கான கருவிகள் இல்லை. கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட கண் மருத்துவரும் நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார். இருக்கின்ற ஒன்றிரண்டு அறுவை சிகிச்சை மருத்துவர்களும் நீண்ட விடுப்பில் செல்வது போன்ற பல்வேறு காரணங்களால், உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அவசர சிகிச்சைகள் இங்கு செய்யப்படுவதில்லை.

இதுகுறித்து விவசாயி, சமூக ஆர்வலர் வா.வீரசேனன் கூறியபோது,

“மக்கள்தொகை, நோய்கள், அதிகரிக்கும் விபத்துகளுக்கு ஏற்ப இதனை மேம்படுத்தப்படாததாலும், மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகம், அரசின் அலட்சியத்தாலும் சீரழிவின் உச்சத்தில் உள்ளது. இங்கிருந்த பொது அறுவை அரங்கம், குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை அரங்கம் மூடப்பட்டுவிட்டது.

அதற்குப் பதிலாக, ‘சீமாங்க்’ பிரிவில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கிலேயே, மற்ற அறுவை சிகிச்சைகளும் நடைபெறுகின்றன.

இதனால், தாய்மார் களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஜெனரேட்டர் முறையாக இயக்கப்படாததால், இரவு நேரங்களில் மின்சாரம் தடைபடும்போது, குழந்தைகள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

குறைந்த திறன் கொண்ட எக்ஸ்ரே யூனிட்தான் உள்ளது. எக்ஸ்ரே, இசிஜி இரண்டுக்கும் ஒரே ஊழியர் மட்டுமே உள்ளதால், பெரும்பாலும் மூடியே கிடக்கிறது. குறைகளைக் களைந்து, போதிய நிரந்தர மயக்க மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், எம்டி மருத்துவர்கள், பணியாளர்களை நியமித்து, நவீன கருவிகளை அமைத்து உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளை இங்கேயே செய்ய வேண்டும். உடனடியாக மாநில அரசு இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு கூறியபோது,

“இந்த மருத்துவமனை சீர்கேடுகள் தொடர்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம். மருத்துவமனையின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. தலையில் சிறு காயம் என்றால்கூட, தஞ்சைக்கு அனுப்பி விடுகின்றனர். ஏழை, எளிய மக்கள்தான் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களை, தனியாரை நோக்கி துரத்தியடிக்கும் நிலை உள்ளது. உடனடியாக இந்த மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்” என்றார். இதுகுறித்து, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டி.ராணி அசோகனைச் சந்தித்து கேட்டபோது, பதில் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

தஞ்சாவூர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஜெயசேகரிடம் கேட்டபோது,

“புதிதாக கம்ப்யூட்டர் எக்ஸ்ரே இயந்திரம் வந்துள்ளது. ‘சீமாங்க்’ பிரிவில் அல்ட்ரா ஸ்கேன் உள்ளது. ‘நானோ’ குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை அரங்கம் அமையவுள்ளது. தொகுதி எம்எல்ஏ நிதி ரூ.40 லட்சத்தில் நவீன சமையல் கூடம், தொகுதி எம்.பி., எம்எல்ஏ நிதி ரூ.40 லட்சத்தில் புறநோயாளிகள் பிரிவு ஆகியன கட்டப்படவுள்ளன. ஏற்கெனவே உள்ள ‘சீமாங்க்’ கட்டிடத்தின் மேலே கூடுதலாக ஒரு தளம் அமைத்து மகப்பேறுக்கான 6 படுக்கை கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு வார்டு அமைக்கப்படவுள்ளன. நீரிழிவு நோயாளிகளின் வசதிக்காக 2 டயாலிசிஸ் இயந்திரங்கள் வரவுள்ளன. தீவிர இருதய சிகிச்சைப் பிரிவில் கூடுதலாக 6 படுக்கை வசதிகள் செய்யப்படவுள்ளன. மேலும் புதிய வசதிகளுடன் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையான வசதிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x