Last Updated : 21 Jan, 2023 03:10 AM

2  

Published : 21 Jan 2023 03:10 AM
Last Updated : 21 Jan 2023 03:10 AM

கோவை | 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலம் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை

மீட்கப்பட்ட இடத்தில் அறிவிப்புப் பலகையை வைத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள்.

கோவை: கோவையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.24.70 கோடி மதிப்புள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தை இந்துசமய அறநிலையத்துறையினர் மீட்டனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள பரமேஸ்வரன்பாளையத்தில் வெங்கடேசப் பெருமாள் திருக்கோயி்ல் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான மொத்தம் 24.7 ஏக்கர் இடம், பரமேஸ்வரன்பாளையம் அருகேயுள்ள தேவராயபுரம் கிராமத்தில் 4 பகுதிகளாக அடுத்தடுத்துள்ளது. 4 இடங்களும் விவசாய நிலமாக இருந்தாலும், 2 இடங்கள் மட்டுமே முழு விவசாய பயன்பாட்டில் உள்ளது. வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான மேற்கண்ட 4 இடங்களையும் அப்பகுதியைச் சேர்ந்த ராமசாமி, சுந்தர்ராஜ், ஸ்ரீனிவாச ஐயங்கார் ஆகியோர் பயன்படுத்தி வந்தனர்.

கோயிலுக்கு சொந்தமான மேற்கண்ட 24.7 ஏக்கர் இடத்தை மீட்க இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்து, இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கில் கடந்த மே மாதம், மேற்கண்ட 24.7 ஏக்கர் இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட இட்த்தை மீட்பதற்கான நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறையினர் நேற்று (ஜன.20) மேற்கொண்டனர். இணை ஆணையர் பரஞ்சோதி உத்தரவின் பேரி்ல, உதவி ஆணையர் கருணாநிதி, கோயிலின் செயல் அலுவலர் ஹேமலதா உள்ளிட்ட அறநிலையத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று 24.7 ஏக்கர் இடத்தை மீட்டனர்.

இதுதொடர்பாக செயல் அலுவலர் ஹேமலதா கூறும்போது, ‘‘மீட்கப்பட்ட இடம் 30 ஆண்டுகளுக்கு மேலாக 3 தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளது. இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.24 கோடியே 74 லட்சம் ஆகும். மீட்கப்பட்ட இடத்தில் இந்த இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்ற அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x