Published : 20 Jan 2023 06:55 PM
Last Updated : 20 Jan 2023 06:55 PM

கரூர் | ரயில் பயணத்தில் குழந்தைக்கு திடீர் உடல்நல பாதிப்பு: ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு

கரூர்: ரயில் பயணத்தின்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கரூர் ரயில் நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு குழந்தை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள திருச்சுழியைச் சேர்ந்தவர் சஞ்சீவி (30). இவர் மனைவி பொன்னரசி (25). இவர்களுக்கு சஹானா என்ற ஒன்றரை வயது பெண்குழந்தை உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சஞ்சீவி பணியாற்றி வருகிறார்.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக குடும்பத்துடன் சொந்தஊர் சென்ற குமரன் விடுமுறை முடிந்து இன்று (ஜன. 20) மேட்டூர் புறப்பட்டார். திருச்சுழியிலிருந்து மதுரைக்கு பேருந்தில் வந்த குமரன் மதுரையில் இருந்து சேலம் செல்வதற்காக நாகர்கோவில் மும்பை விரைவு ரயிலில் (16340) படுக்கை வசதியுடன் கூடிய முன்பதிவு பெட்டியில் மனைவி குழந்தையுடன் சஞ்சீவி பயணம் செய்துகொண்டிருந்தார்.

மதுரையிலிருந்து ரயில் திண்டுக்கல்லை அடைந்தது. அங்கிருந்து கரூர் நோக்கிரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் சுமார் 12.30 மணி போல குழந்தை சஹானாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து வாந்தி எடுத்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால் பதறிப்போன சஞ்சீவி பயணச்சீட்டு பரிசோதகரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் கரூர் ரயில் நிலைய சந்திப்பு (ஜங்ஷன்) கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து ரயில்நிலைய அலுவலர் ராஜேஷ்கண்ணா ரயில் நிலைய சந்திப்பில் உள்ள தனியார் அவசர மருத்துவ சிகிச்சை உதவி மையத்திற்கு தகவல் அளித்தார். அங்கிருந்த ஊழியர் ராஜன் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து கரூர் ரயில்நிலைய சந்திப்புக்கு ஆம்புலன்ஸை வரவழைத்தார்.

இதையடுத்து ரயில் வருகைக்காக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் காத்திருந்தனர். மதியம் 1.14 மணிக்கு ரயில் கரூர்ரயில் நிலைய சந்திப்புககு வந்ததும் குழந்தை சஹானாவை பெற்றோருடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதனால் கரூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x