Published : 20 Jan 2023 06:17 PM
Last Updated : 20 Jan 2023 06:17 PM

சென்னையில் 17 லட்சம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை இல்லம் தேடி வழங்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

மையத்தை திறந்து வைத்த கே.என்.நேரு

சென்னை: சென்னையில் 17 லட்சம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை இல்லம் தேடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட இளங்கோ நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய டயாலிசிஸ் மையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜன.20) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "முதல்வர் சென்னை மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராக பணியாற்றியபோது, சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டார்கள். சென்னை மாநகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து முழுவதும் அறிந்தவர் நம்முடைய முதல்வர்.

தற்போது கூட பல்வேறு துறைகளின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து சென்னையின் வளர்ச்சிக்காக நாள்தோறும் பணியாற்றி வருகிறார். சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.500 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்கியுள்ளார்கள். கடந்த ஆண்டு மட்டும் மாநகராட்சியில் ரூ.1000 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால்கள் அமைக்க நிதி ஒதுக்கினார்கள்.

இதேபோன்று, சென்னையின் அடிப்படைத் தேவைகளில் முக்கியப் பிரச்சினையாக உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் பணிகளுக்காக சென்னை குடிநீர் வாரியத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளார்கள். பல ஆண்டுகளாக உள்ள பழுதடைந்த கழிவுநீர் குழாய்களை மாற்றியமைக்கும் பணிகளும், சென்னையில் உள்ள 17 லட்சம் வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை இல்லம் தேடி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் நாளொன்றுக்கு 1000 எம்.எல்.டி. அளவிற்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. முதல்வர் அடுத்த 30 ஆண்டுகளுக்கு சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்குப் பார்வையோடு 150 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்கள். மேலும், 400 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த காலங்களில் பாசன பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஏரிகள் கண்டறியப்பட்டு அவற்றைத் தூர்வாரி, ஆழப்படுத்தி மழைநீரை சேகரித்து குடிநீர் ஆதாரமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள்.

பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவச் சேவைகளை வழங்க தற்போது கூட சுமார் 736 நலவாழ்வு மையங்களை அமைக்க உத்தரவிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் 372 இடங்களில் சுமார் 3,732 இருக்கைகள் கொண்ட கழிவறைகள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

முதல்வர் சென்னையில் சாலை வசதி, மருத்துவச் சேவைகள், மழைநீர் வடிகால் பணிகள், தெருவிளக்குகள், குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் பணிகள் போன்ற அனைத்து விதமான அடிப்படைத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறார்" என்று அமைச்சர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x