Last Updated : 18 Dec, 2016 10:50 AM

 

Published : 18 Dec 2016 10:50 AM
Last Updated : 18 Dec 2016 10:50 AM

புயலால் சேதமடைந்த 700 பயணிகள் நிழற்குடைகள்: சீரமைக்க ஓரிரு மாதங்கள் ஆகும்

‘வார்தா’ புயலால் சென்னையில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் நிழற்குடைகள் முற்றிலுமாகவும், 400 நிழற்குடைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேற்கூரைகள், விளம்பரப் பலகைகள் தூக்கி வீசப்பட்டதால் எலும்புக்கூடுகள்போல காட்சியளிக்கின்றன.

சென்னை மாநகரில் 471 பேருந்து சாலைகளும், 60 சிறிய பேருந்து சாலைகளும் உள்ளன. இச்சாலைகளில் சுமார் ஆயிரம் பயணிகள் நிழற்குடைகள் உள்ளன. கடந்த காலங்களில் நிழற்குடைகள் கான்கிரீட் கட்டிடமாக கட்டப்பட்டன. மழை, வெயில் காலங்களில் பயணிகளுக்கு பெரிதும் பயன்பட்டதுடன் நீண்டகாலத்துக்கு வலுவாகவும் இருந்தன.

அண்மையில் துருப்பிடிக்காத இரும்பைக் கொண்டு நூற்றுக்கணக்கான நிழற்குடைகள் தலா ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்டன. அதில் அரசின் சாதனைகளை விளக்கும் விளம்பரங்களும் சில தனியார் விளம்பரங்களும் செய்யப்பட்டன. இரவிலும் பார்க்க வசதியாக வண்ண விளக்குகளால் விளம்பரப் பலகைகள் அமைக்கப்பட்டன. இந்த நவீன நிழற்குடைகளுக்கு மக்களிடம் வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி ‘வார்தா’ புயல் சென்னையைத் தாக்கியது. சூறைக்காற்றில் மிகப்பழமையான பெரிய மரங்களும் ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும் சாய்ந்தன. கடைகள், வர்த்தக நிறுவனங்களின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் நொறுங்கின. இத்தாக்குதலில் இருந்து பேருந்து பயணிகள் நிழற்குடைகளும் தப்பவில்லை.

சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடைகளை ‘வார்தா’ புயல் சூறையாடியது. பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள பயணிகள் நிழற்குடைகள் உருக்குலைந்து கிடக்கின்றன. ஜிஎஸ்டி சாலையில் உள்ள நிழற்குடைகள் மீது மரங்கள் முறிந்து சாய்ந்ததால் நசுங்கிவிட்டன. பூந்தமல்லி நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை உள்ளிட்ட சாலைகளில் உள்ள பெரும்பாலான நிழற்குடைகளில் மேற்கூரையே இல்லை. பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சில இடங்களில் நிழற்குடைகளின் இரும்புப் பலகைகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘புயலால் சென்னை மாநகரில் சுமார் 300 பயணிகள் நிழற்குடைகள் முழுவதுமாகவும், 400 நிழற்குடைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. இவற்றின் சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அரசும், மாநகராட்சியும் நிதி ஒதுக்கிய பிறகு நிழற்குடைகளை சீரமைக்கும் பணி தொடங்கும். இப்பணி முடிவடைய ஓரிரு மாதங்கள் ஆகும்’’ என்றார்.

ராஜேஷ், லாவண்யா உள்ளிட்ட பயணிகள் கூறும்போது, ‘‘நவீன நிழற்குடைகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தன. ஆனால், தற்போது சூறைக்காற்றில் சேதமடைந்ததால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் நிழற்குடைகளை அரசு விரைவில் சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x