Published : 20 Jan 2023 01:28 PM
Last Updated : 20 Jan 2023 01:28 PM
சென்னை: கனிம வளங்களை கொண்டு அரசின் வருவாயை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பது தவறான முடிவு என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த, தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், ஒன்றிய அரசின் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் முன்னிலையில் சமீபத்தில் கையெழுத்தானது.
அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் கடற்கரையோர கனிம வளங்களை குறிப்பாக, கார்னட், இலுமினைட், ஜிர்கான், ரூட்டைல் போன்ற கனிமங்களை பிரித்தெடுத்து சந்தைப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
கடலோர கனிமங்களை பிரித்தெடுக்கவும், அதனை மதிப்பு கூட்டப்பட்டப் பொருட்களாக மேம்படுத்தவும், அதன்மூலம் அணுசக்தித் துறைக்கு தேவையான முக்கியமான கனிமங்கள் கிடைக்க செய்வதுடன் பிற தொழில்களுக்கு இதர கனிமங்கள் கிடைக்கப்பெற வாய்ப்பும் உண்டாகும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 52 மில்லியன் டன் தேரி மணல் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இரண்டு தொழிற்சாலைகள் குதிரைமொழி, சாத்தான்குளம் ஆகிய இடங்களில் தலா 1500 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவி ஆண்டிற்கு ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் 1075 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை குறிப்பாக கனிம வளங்களை கொண்டு அரசின் வருவாயை அதிகரிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பது, தவறான முடிவாகும்.
தேரி மணல் மற்றும் தாது மணலில் இருந்து கனிமங்களைப் பிரித்தெரிடுக்கும் நடைமுறை அதிக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். கடற்கரையோரம் பிரித்தெடுக்கப்படும் கனிமங்களில் பல கனிமங்கள் அபாயகரமான கதிரியக்க வீச்சு கொண்டவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.
5152.51 ஹெக்டேர் கொண்ட குதிரைமொழித்தேரியும், 899.08 ஹெக்டேர் கொண்ட சாத்தான்குளம் தேரியும் பாதுகாக்கப்பட்ட காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படியான ஒரு சூழல் முக்கியத்தும் வாய்ந்த இடத்தை கனிம வள வருவாய்க்காக தென்மாவட்ட கடலோரங்களின் இயற்கை அமைவுகளைச் பாதிப்படைய செய்யும் முயற்சிகள் வேதனைக்குரியது.
குளச்சல், மணவாளக்குறிச்சி, பூந்துறை, மேல்மிடாலம், முருங்கவிளை, புத்தந்துறை ஆகிய இடங்கள் கடும் கடலரிப்பை சந்தித்து வருவதாக ஒன்றிய புவி அறிவியல் துறையின் NATIONAL ASSESSMENT OF SHORELINE CHANGES ALONG INDIAN COAST அறிக்கை தெரிவிக்கிறது.
எனவே, தமிழ்நாட்டின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றான தேரிப்பகுதி மற்றும் தீவிர கடலரிப்பைச் சந்தித்து வரும் தென்மாவட்ட கடலோரங்களின் இயற்கை அமைவுகளைச் பாதிப்படைய செய்யும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT