Published : 20 Jan 2023 06:45 AM
Last Updated : 20 Jan 2023 06:45 AM
சென்னை: மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) அறிவித்துள்ளது. மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.
இந்த தேர்வு எழுதத் தகுதியானவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக பிப்ரவரி 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப். 23, 24-ம் தேதிகளில் தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான கணினி வழித்தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்படஉள்ளது.
வழக்கமாக எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. மாநில மொழிகளிலும் எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகளை நடத்த வேண்டும்என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில், இந்தக் கோரிக்கைகளை ஏற்று, எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகள் தமிழ், இந்தி, ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://ssc.nic.in -ல் தெரிந்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT