Published : 20 Jan 2023 05:24 AM
Last Updated : 20 Jan 2023 05:24 AM

தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் - போலி ஆவணங்கள் மூலம் 400 வாகனங்கள் பதிவு

சென்னை: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பிஎஸ் 4 வகை வாகனங்களை பதிவு செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து பிஎஸ் 4 வகை வாகனங்களை பெரும்பாலானோர் வாங்காததால் அவை வாகன விற்பனையாளர்களிடம் அதிகளவில் இருப்பில் இருந்தன.

அதே நேரம், கூட்டுத் தொகை 8 என்றிருக்கும் வாகன பதிவெண்களை மக்கள் விரும்புவதில்லை. அதனால் அந்த எண்களை கேட்போருக்கு மட்டுமே வழங்குமாறு வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படாமல் இருக்கும் வாகன எண்களை தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்களுக்கு முறைகேடாக பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலேயே இடைத்தரகர்கள் சிலர் போலியான லாக் இன் ஐடியை உருவாக்கி, பதிவு செய்யும் பணிகளைச் செய்ததாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக இந்த பதிவெண் கொண்ட வாகனங்களை ஒருவர் வாங்கி, மற்றொருவரிடம் விற்றதாக போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதனை சரிபார்த்து வாகனத்தை வாங்குவதற்கு வரும் 3-வது நபர், குறைந்த கி.மீ. இயக்கப்பட்ட நிலையில், விலையும் குறைவாக கிடைப்பதாக கருதி, உடனடியாக வாகனத்தை வாங்கி விடுகின்றனர்.

இந்த மோசடியில் சில நிதி நிறுவனங்களும் இணைந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி, தங்களிடம் வாகன கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாததால் ஏலம் விடப்படும் வாகனங்களில் இந்த முறைகேடாக பதிவு செய்யப்பட்ட வாகன விவரங்களையும்இணைத்து விளம்பரம் செய்துள்ளன. இந்நிறுவனங்களிடம் இருந்தும் சிலர் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 வகை வாகனங்களை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் சில போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதால், சம்பந்தப்பட்ட வாகனங்களை சிறைபிடிக்கும் முயற்சியும் நடந்துள்ளது. இதுவரை சுமார் 400 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் அறிக்கையை தயார் செய்து, நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். உள்துறை செயலாளர் இந்த அறிக்கையை தமிழக டிஜிபிக்கு அனுப்பி விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து பி.எஸ் 4 இன்ஜின் வாகனங்கள் எத்தனை ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட வாகன உற்பத்தியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்கள், முகவர்கள், ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x