Published : 20 Jan 2023 04:51 AM
Last Updated : 20 Jan 2023 04:51 AM
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. முதல்வர் ஸ்டாலினுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, இந்த தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளதாக மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா உயிரிழந்ததைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 27-ல் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. எனவே, இந்த தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று இரவு முதல்வர் மு.க.ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், மூத்த தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
இது தொடர்பாக மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வெளியிட்ட அறிக்கையில், "2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளது. எனவே, இடைத்தேர்தலிலும் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்குவது என முடி வெடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி, கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு, வெற்றிபெற்ற தொகுதி. எனவே, இடைத்தேர்தலிலும் அங்கு காங்கிரஸ் கட்சிதான் போட்டியிடும்.
எனவே, காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு அளிக்குமாறு திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக் ஆகிய கூட்டணிக் கட்சிகளிடம் வலியுறுத்தினோம். இந்நிலையில், தற்போது மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி, காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஒதுக்கப்பட்டது. அவர் தனது மகனை நிறுத்தினார். எனவே, தற்போதும் அங்கு போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்யும் உரிமையை இளங்கோவனுக்கே காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. எனினும், இடைத் தேர்தலில் இளங்கோவனே போட்டியிடக்கூடும் என்று கூறப் படுகிறது.
இந்த தொகுதியில் வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 27-ல் வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT