Published : 20 Jan 2023 05:49 AM
Last Updated : 20 Jan 2023 05:49 AM
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்டு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தை நேற்று திறந்து வைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கத் திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் மொழி வல்லுநர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டு, மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள இந்து சமயம் சார்ந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர், ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பதிப்பகப் பிரிவின் செயல்பாடுகளை பார்வையிட்ட முதல்வர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தையும் திறந்து வைத்தார். இவ்வாறு மறுபதிப்பு செய்து வெளியிடப்படும் அரிய புத்தகங்கள் ஆணையர் அலுவலக புத்தக விற்பனை நிலையம் மற்றும் 48 முதுநிலைத் திருக்கோயில்களின் ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும்.
இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம்திருக்கோயில்களின் தலவரலாறு,தலபுராணங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், பழமையான அரிய நூல்களை புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்து அச்சிட்டு வெளியிடப்படும். அத்துடன், 9 திருக்கோயில்களில் கண்டறிப்பட்டுள்ள சுமார் 61,600 சுருணை ஓலைகளும், 10 செப்புப் பட்டயங்களும், 20 பிற ஓலைச்சுவடிகளை பராமரித்துப் பாதுகாத்து, எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்ககப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT