Published : 03 Dec 2016 10:07 AM
Last Updated : 03 Dec 2016 10:07 AM
திராட்சை சாகுபடியில் உற்பத்தியை பெருக்கவும், வறட்சியை சமாளிக்கவும், நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய வேர் செடிகளைப் பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவில் மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களில் சுமார் 1.11 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் திராட்சை சாகுபடி செய்யப்பட்டு, ஏறக்குறைய 12.35 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்த உற்பத்தியில் தற்போது 2.1 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, சிங்கப்பூர், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் 90 சதவீதத்துக்கும் மேலான திராட்சை சாப்பிடுவதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் விதையில்லா திராட்சை உற்பத்தியில் 30 சதவீதத்துக்கு மேல் உலர் திராட்சையாக உற் பத்தி செய்யப்படுகிறது.
மேலும் பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த தொழிற்கூடங் களில் வேலைவாய்ப்பை உரு வாக்கித் தருவதோடு, தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்து வதிலும் திராட்சை சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கிறது.
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் ‘பன்னீர்’ என்று அழைக்கப்படும் கருப்புநிற திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் திராட்சைகளைப் பாதுகாக்க, சின்னமனூர் அருகே வேளாண் துறையினரால் அமைக் கப்பட்டிருந்த குளிர் பதனிடும் கிடங் கில் வைத்தபோது, பழங்களின் தோல்கள் மெல்லியதாக இருந்த காரணத்தால் வெடிப்பு ஏற்பட்டு 3 நாட்களுக்கு மேல் குளிர்ச்சியை தாக்குப்பிடிக்க முடியாமல் பழங்கள் அழுகின. இதனால் திராட்சை விவசாயிகள் நஷ்டம் அடைந்து வந்தனர்.
இதனையடுத்து மாற்று ஏற்பாடு செய்யக்கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கம்பம் அருகே ராயப்பன்பட்டி கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு திராட்சை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் பலரக திராட்சை சாகுபடி குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ராயப்பன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலைய தலைவர் எஸ்.பார்த்திபன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: வறட்சியை தாங்கக்கூடிய மற்றும் நோய் தாக்குதல் குறைவான, உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் வேர்செடி அல்லது வேர்குச்சி என்று அழைக்கப்படும் ‘டாக்ரிட்ஜ்’ (Dog Ridge) அறிமுகப் படுத்தப்பட்டது. இந்தச் செடியை வெட்டி திராட்சை செடியுடன் ஒட்டி கட்டிவிட்டால், அவை வளர்ந்த பின்னர் அதிக விளைச்சலைத் தரும். ஒரு ஏக்கருக்கு 250 டாக்ரிட்ஜ் தேவைப்படும். பெங்களூருவில் இந்த ஜப்பான் டாக்ரிட்ஜ் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்கிருந்து வாங்கி வந்தால், வாகனப் போக்குவரத்து உள்ளிட்ட கூடுதல் செலவு ஏற்பட்டு ஒரு செடிக்கு ரூ.18 முதல் ரூ.20 வரை ஆகும். ஆனால், நாங்கள் குறைந்த விலையில் ஒரு செடி ரூ.7-க்கு விற்கிறோம். இதனைத் திராட்சை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக, குறுகிய காலத்திலேயே 2 லட்சம் செடிகள் வரை விற்பனையாகி உள்ளன. தற்போது செடிகள் கேட்டு ஏராளமான விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் என்றார்.
திராட்சை சாகுபடிக்கு உகந்த ரகங்கள்
எஸ். பார்த்திபன் மேலும் கூறுகையில், ஏற்றுமதி சந்தைக்கு விதையில்லா மற்றும் விதையுடைய ரகங்களான தாம்சன் சீட்லஸ், சரத் சீட்லஸ், கிருஷ்ணா சீட்லஸ், பேண்டலி சீட்லஸ், பிளேம் சீட்லஸ், கிரிம்ஸன் சீட்ஸல், தாசே கணேஷ், ரெட்குளோப் ஆகிய திராட்சைகளையும், உள்ளூர் சந்தைக்கு உகந்த வர்த்தக ரீதியான சாகுபடிக்கு விதையுடைய பன்னீர் திராட்சையையும் விவசாயிகள் சாகுபடி செய்யலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT