Published : 22 Jul 2014 12:16 PM
Last Updated : 22 Jul 2014 12:16 PM
அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தைத் தொடர்ந்து, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளுக்கு வயது வரம்பில் எவ்வித கட்டுப்பாடும் கொண்டு வரப்படவில்லை.
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு வரை இந்தத் தேர்வுகளுக்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கவில்லை. உரிய கல்வித் தகுதியுடன் 57 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம் என்றிருந்தது.
தற்போது முதல்முறையாக அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி எஸ்சி, எஸ்டி வகுப்பினர் உள்பட அனைவருக்கும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வயது வரம்பு தகுதியுடன்தான் 139 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற் கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் வெளியிட் டது.
பட்டதாரிகள் அதிர்ச்சி
பள்ளி ஆசிரியர்கள், அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு 57 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை இருக்கும்போது, அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு மட்டும் வயது வரம்பு நிர்ணயித்திருப்பதால் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., எம்.ஏ. பட்டதாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்தில் பொறியியல் பாடங்களுக்கும் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட் ரானிக்ஸ் கம்யூனிகேஷன் போன் றவை) வயது வரம்பு கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.
அதேநேரத்தில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளுக்கு தற்போது இருப்பதைப் போன்று 57 வயதாக நிர்ணயிக்கப்பட உள்ளது.
606 காலியிடங்கள்
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 606 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களை இந்த புதிய வயது வரம்பு தகுதி அடிப்படையில் தேர்வுசெய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்திருக் கிறது.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு பொறியியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க முதல் வகுப்பில் பி.இ. அல்லது பி.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட பாடத்தில் முதல் வகுப்பில் முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். நெட், ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி தேவையில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT