Published : 19 Jan 2023 05:25 PM
Last Updated : 19 Jan 2023 05:25 PM
சென்னை: "ஒரு கோடியே ஓராவது பயனாளிகள் யார் யார்? எடப்பாடியில் எத்தனை பயனாளிகள் இருக்கின்றனர்? சேலத்தில் எத்தனை பேர் இருக்கின்றனர் உள்ளிட்ட எல்லா விவரங்களும் தற்போது தயார் நிலையில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி விரும்புவாரேயானால், டிபிஎச் அலுவலகத்திற்கு வந்து தேவைப்பட்டால் பார்த்து தெரிந்து கொள்ளலாம்" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட அடையாறில் ரூபாய்.35 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதி கண்ணகி நகரில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் ஆகியவைகளுக்கு வியாழக்கிழமை (ஜன.19) அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், மக்களைத் தேடி மருத்துவம் குறித்த எடப்பாடி பழனிசாமி அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "எடப்பாடி பழனிசாமி எப்போது தூக்கத்தில் இருந்து விழித்தார் என்று தெரியவில்லை. காரணம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமணப்பள்ளி என்ற கிராமத்தில் தொடங்கப்பட்டது. ஒரு கோடியே ஓராவது பயனாளி திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டி அருகே இருக்கும் ஒரு சகோதரி. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி தொடங்கி திருச்சி சன்னாசிபட்டி வரை, முதலவது பயனாளி, 50 லட்சமாவது பயனாளி, 60 லட்சமாவது பயனாளி, 75 லட்சமாவது பயனாளி, 80, 90 லட்சமாவது பயனாளி, ஒரு கோடியே ஓராவது பயனாளி என்ற நீண்ட வரலாறைக் கொண்டிருப்பது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்.
இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. உலகில் எந்தவொரு நாட்டிலும் செய்யப்படாத ஒரு அற்புதமான காரியம். இதைத்தாங்கிக் கொள்ளமுடியாமல் வயிற்றெரிச்சல் காரணமாக பரப்பப்படுகின்ற செய்தி. ஒரு கோடியே ஒராவது பயனாளிகள் யார் யார்? எடப்பாடியில் எத்தனை பயனாளிகள் இருக்கின்றனர்? சேலத்தில் எத்தனை பேர் இருக்கின்றனர்? பயனாளிகள் பெயர், விலாசம் அவருக்கான நோய் தன்மை உள்ளிட்ட எல்லா விவரங்களும் தற்போது தயார் நிலையில் இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி விரும்புவாரேயானால், டிபிஎச் அலுவலகத்திற்கு வந்து தேவைப்பட்டால் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதைவிடுத்து அறிக்கைகள் மூலம் மக்களை குழப்பலாம் என்று நினைத்தாலும், குழம்பி குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைத்தாலும் நிச்சயம் நடக்காது. இது அவருக்கு அழகான விஷயமும் அல்ல" என்று அவர் கூறினார்.
முன்னதாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு கோடி பேருக்கும்மேல் மருந்துப் பெட்டகங்கள் நோயாளிகளுக்கு கொடுத்ததாக எந்தவிதமான புள்ளி விவரக் குறிப்பும் இல்லை என்று தெரிவித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.
எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை என்ற திட்டத்தில், ஒரு வாகனத்தை மட்டும் கூடுதலாக்கி, இந்த அரசு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்று மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி இருக்கிறது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டுள்ளது என்றும், ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் தமிழக முதல்வரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...