Published : 19 Jan 2023 01:36 PM
Last Updated : 19 Jan 2023 01:36 PM

மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ள மின்சார சட்டத் திருத்த விதிகள் 2022 நடைமுறைப்படுத்தப்பட்டால், மின்சாரக் கட்டணம் அதன் உற்பத்திச் செலவு மற்றும் கொள்முதல் விலைகளுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் செலவு அதிகரித்தாலோ, கொள்முதல் விலை உயர்ந்தாலோ, அந்த கூடுதல் செலவை அதே மாதத்தில் நுகர்வோரிடமிருந்து வசூலிக்க புதிய விதிகள் வகை செய்கின்றன. தனியார் மின்நிறுவனங்களுக்கு சாதகமான இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தகைய சூழலில் கொள்முதல் விலைக்கேற்ப மின்கட்டணம் உயர்த்தப்படுமானால், மின்சார கொள்முதலில் நடக்கும் ஊழல்களின் சுமையைக் கூட மக்கள் தான் சுமக்க வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது தேவையற்ற குழப்பங்களையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். இன்றைய சூழலில் மக்களால் இதை தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, மின்சார சட்டத் திருத்த விதிகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது; இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும்!" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x