Published : 19 Jan 2023 05:08 AM
Last Updated : 19 Jan 2023 05:08 AM
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவெரா. இவரது தந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்தது.
இதற்கிடையில், மேகாலயா உள்ளிட்ட 3 மாநிலத் தேர்தலுடன், 6மாநிலங்களில் காலியாக உள்ள, ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் நேற்றுஅறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 27-ல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தும் என்றுதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதிபட அறிவித்துவிட்டார்.
ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மற்றொரு மகன் சஞ்சய் சம்பத், ஏற்றுமதியாளராக உள்ளார். வரும்இடைத் தேர்தலில் அவரை போட்டியிடச் செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சஞ்சய் சம்பத்துக்கு அரசியல் ஆர்வம் குறைவுஎன்பதால், அந்த இடத்தில் இளங்கோவன் விட்டுக்கொடுக்கும்பட்சத்தில், மாவட்டத் தலைவர் மக்கள்ராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல, ரவி, சரவணன் ஆகியமற்ற இரு மாவட்டத் தலைவர்களும் போட்டியிடத் தயாராக உள்ளனர்.
இடைத்தேர்தலின்போது அதிக அளவில் பணம் செலவிட வேண்டியிருக்கும். மேலும், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் இருக்கும். அதனால் பணபலம் மற்றும் மக்கள் பலம் கொண்டவேட்பாளருக்கே காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்கும்.
2021 தேர்தலில் இந்த தொகுதிஅதிமுக கூட்டணி சார்பில், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தமாகா சார்பில் போட்டியிட்ட, கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா தோல்வியடைந்தார். எனவே, மீண்டும் யுவராஜாவை நிறுத்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் முயற்சி மேற்கொள்ளக்கூடும்.
அதிமுகவில் இரு அணிகள் செயல்பட்டு வருவதால், சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும். அதேபோல, பழனிசாமி நடத்திய பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இந்த தேர்தல் முடிந்த பிறகே வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவுக்கு கிடைத்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை, பாஜக தலையிட்டு ஜி.கே.வாசனுக்குப் பெற்றுத் தந்தது. இந்த சூழலில், அதிமுக, தமாகா சம்மதத்துடன், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையை நிறுத்தவும்பாஜக தலைமை முயற்சி மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
பழனிசாமி - வாசன் சந்திப்பு: இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா மீண்டும் போட்டியிட ஆதரவு அளிக்குமாறு கோரியுள்ளார். கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து தெரிவிப்பதாக பழனிசாமி பதில்அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் ஆலோசனை
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் ஜன.23-ம் தேதிமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதா, கூட்டணி கட்சிகளான தமாகா,பாஜகவில் யாருக்கேனும் விட்டு கொடுப்பதா, அதிமுக சார்பில் போட்டியிட யாருக்காவது விருப்பம்உள்ளதா, இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கான சட்ட வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அக்கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment