Published : 10 Dec 2016 10:46 AM
Last Updated : 10 Dec 2016 10:46 AM
திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் 3-வது வீதியில் வசிப்பவர் மணிமாறன். இவரது மனைவி ராணி. பின்னலாடை நிறுவனத் தொழிலாளிகள். இவர்களது 3-வது மகள் பிரியா (15), திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
கடந்த ஆக.19-ம் தேதி பள்ளி செல்வதற்காக வீட்டில் இருந்து அரசுப் பேருந்தில் சென்றவர், புஷ்பா திரையரங்க நிறுத்தத்தில் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் இரு கால்களையும் இழந்தார்.
திருப்பூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை முடித்துவிட்டு கடந்த நவ.3-ம் தேதி வீடு திரும்பினர். தற்போது, வீட்டில் பிசியோதெரபி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான்.
ஜெயலலிதா மறைவு செய்தி அறிந்த நாள் முதல், வீட்டில் துக்கத்துடன் மறைந்த முதல்வரின் புகைப்படத்துக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்துகின்றனர் பிரியாவின் குடும்பத்தினர்.
இதுகுறித்து மாணவி பிரியா கூறும்போது, “முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை முடிந்து மீண்டும் பணிகளை தொடர்வார் என எதிர்பார்த்தோம். ஆனால், அவர் மறைந்தது எங்கள் குடும்பத்துக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு. விபத்தில், நான் இறந்துவிட்டேன் என்றே நினைத்தேன். இடது காலில் சதை முழுவதும் இன்றி மிகவும் கோரமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு என் இரு கால்களில் 5 மிகப்பெரிய அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. ரூ.13 லட்சம் வரை செலவாகியுள்ளது. எங்கள் குடும்பத்தின் சூழ்நிலை அறிந்து, மருத்துவச் செலவு முழுவதையும் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா உடனடியாக அளித்தார்.
அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததும் நேரில் சந்திக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதற்குள் இப்படியொரு சோகம் ஏற்பட்டுவிட்டது. அவர் இறந்துவிட்டாலும், எங்களைப் போன்ற ஏழைகள் பலருக்கும் உயிர் கொடுத்துள்ளார்” என்றார்.
தந்தை மணிமாறன் கூறும்போது, “தமிழகத்தில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான விபத்துகள் நிகழ்கின்றன. ஆனால், என் மகளுக்கு நடந்த விபத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்ல திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.-க்கள், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை ஆயுதப் படை ஆய்வாளர் விஜயன் உட்பட பலரும் உதவினார்கள். இதனால், முதல்வரும் மகளின் மருத்துவச் செலவை ஏற்பதாக அறிவித்தார். இன்றைக்கு என் மகள் வீட்டுக்குள் முடங்காமல் நடமாடத் தொடங்கியுள்ளார்.
மேலும், விபத்தில் சிக்கிய மகளின் படங்கள் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலமாக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கும் சென்றது. இதையடுத்து பலரும் உதவினார்கள். அதன்மூலமாக கிடைத்த ரூ.10 லட்சத்தை, மகளின் எதிர்காலத்துக்காக வங்கியில் போட்டுவைக்கும்படி, உதவியவர்கள் சொன்னார்கள்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு பின்னால் யாரிடமும் நாங்கள் உதவி கோரவில்லை. உதவ முன் வந்தவர்களையும் வேண்டாம் என தவிர்த்துவிட்டோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT