Published : 19 Jan 2023 07:51 AM
Last Updated : 19 Jan 2023 07:51 AM
கோவை: கோவை கங்கா மருத்துவமனையின் ஆராய்ச்சி குழுவுக்கு 2022-ம் ஆண்டின் சிறந்த முதுகு தண்டுவட ஆராய்ச்சிக்கான ஐஎஸ்எஸ்எல்எஸ் விருது கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக கங்கா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எஸ்.ராஜசேகரன் கூறியதாவது: கீழ் முதுகு வலி என்பது 80 சதவீத மக்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஏற்படுகிறது. இதில், 15 சதவீதம் பேருக்கு நிரந்தரமாக அந்த வலி தொடர்கிறது. முதுகு தண்டு ஜவ்வானது அதிகம் பாதிக்கப்பட்ட பிறகே எம்ஆர்ஐ மூலம் கண்டறிய முடிகிறது.
ஆனால், எம்ஆர்எஸ் என்ற முறையில் ஜவ்வு பழுதை முன்கூட்டியே கண்டறிய முடியும். எங்கள் ஆராய்ச்சியின் மூலம் முதுகில் உள்ள ஜவ்வு பழுதுபடாமல், கீழ் முதுகு வலியின் தொடக்கநிலையை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையின் முதுகு தண்டுவட சிகிச்சை பிரிவானது தேசிய, உலக அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. இதற்கு முன்பும் கடந்த 2004, 2010, 2013, 2017, 2022-ம் ஆண்டுகளில் ஐஎஸ்எஸ்எல்எஸ் விருது கிடைத்துள்ளது. முதுகு தண்டுவட ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் இந்த பெருமைமிகு விருதுக்கு உலகம் முழுவதிலும் இருந்து விஞ்ஞானிகள் போட்டியிட்டனர். 50 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், எங்களது ஆய்வு கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருது பெறுபவர்களுக்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்கப்படுவதுடன், ஆராய்ச்சி கட்டுரையானது யுரோப்பியன் ஸ்பைன் ஜர்னலில் பிரசுரிக்கப்படும். மேலும், முதுகு தண்டுவட வாரத்தை முன்னிட்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 2,500முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்கப்படும். இந்த ஆராய்ச்சியை டாக்டர்கள் புஷ்பா, எஸ்.ராஜசேகரன், முருகேஷ் ஈஸ்வரன், ரிஷி முகேஷ் கண்ணா, அஜோய் பிரசாத் ஷெட்டி ஆகியோர் இணைந்து மேற்கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT