Published : 19 Jan 2023 06:06 AM
Last Updated : 19 Jan 2023 06:06 AM
சென்னை: சென்னை மாநகராட்சியில் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் ரூ.1,400 கோடி சொத்துவரி வசூலாகிறது. சொத்துவரி மாநகராட்சியின் முக்கிய நிதி ஆதாரமாகவும் விளங்குகிறது.
சொத்து வரியை www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளம் வழியாக, எவ்வித பரிமாற்ற கட்டணமும் இல்லாமல் செலுத்தலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் நேரடியாக செலுத்தலாம். ‘நம்ம சென்னை’ மற்றும் ‘பேடிஎம்’ ஆகிய கைபேசி செயலி வழியாகவும், மண்டலம் மற்றும் வார்டு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்களிலும் சொத்துவரியை செலுத்தலாம்.
ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை பெற விரும்பாத முதியவர்கள், இருவர் சேர்ந்து வங்கிக் கணக்கு தொடங்கியதால் ஆன்லைன் பணப்பரிமாற்ற வசதி பெறாதவர்கள் போன்றோர் மாநகராட்சிகவுன்டர்களில் நீண்ட நேரம் காத்திருந்து காசோலை மூலமாக சொத்துவரியை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இவர்களின் சிரமத்தைப் போக்கமாநகராட்சி நிர்வாகம், ஃபெடரல் வங்கி ஆகியவை இணைந்து காசோலை வழியாக சொத்துவரி செலுத்துவதற்கான தானியங்கி இயந்திரத்தை ரிப்பன் மாளிகையில் நிறுவியுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த இயந்திரம் ரிப்பன் மாளிகை மற்றும் மாநகராட்சியின் 3 வட்டார துணை ஆணையர் அலுவலகங்கள் எனமொத்தம் 4 இடங்களில் நிறுவப்பட உள்ளது. இந்த இயந்திரத்தில் 24 மணி நேரமும் காசோலைகளை செலுத்தலாம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT