Last Updated : 29 Dec, 2016 10:12 AM

 

Published : 29 Dec 2016 10:12 AM
Last Updated : 29 Dec 2016 10:12 AM

சான்றிதழ், கடிதங்களை எழுத தமிழ் பிராமி எழுத்துகளைப் பயன்படுத்தும் பள்ளி ஆசிரியர்: மாணவர்களுக்கும் கற்றுத் தருகிறார்

பல பரிணாமம் பெற்று வழக்கொழிந்து போன ஆதி தமிழ் பிராமி எழுத்துகளைத் தன் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதுடன், அவற்றை மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அசத்தி வருகிறார் சிதம்பரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர்.

பழங்காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அழியாமல் இருப்பதற்காகவும், எதிர்கால தலைமுறைக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மலைக்குகைகள், நடுகற்கள் போன்றவற்றில் பல்வேறு தகவல்களை முன்னோர்கள் எழுதி வைத்தனர். தமிழ் பிராமி, கிரந்தம், வட்டெழுத்து என வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பல எழுத்துகள் தமிழகம் முழுவதும் கல்வெட்டுகள், செப்பேடுகளில் இன்றளவும் காணப்படுகின்றன.

பழங்கால எழுத்துகள் மெல்ல உருமாறி இன்றைய நடைமுறை எழுத்துகளாக மாறிவிட்டன. கல்வெட்டுக்கள், செப்பேடுகளின் வாயிலாக அன்றைய கால நிகழ்வுகளை நாம் புரிந்து கொள்ளலாம். கல்வெட்டுகளே நம் தொன்மை, பாரம்பரியம், நாகரிகத்தை குறிக்கும் அடையாளங்களாக உள்ளன.

இளங்கோவன்

பழங்கால எழுத்துகளை நம்மால் காண முடிந்தால்கூட அவற்றில் உள்ள தகவல்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. கல்வெட்டு ஆய்வாளர்கள் அல்லது தொல்லியல் அறிஞர்களின் உதவியுடன் மட்டுமே பழங்கால எழுத்துகளைப் படிக்க முடியும். பானைகள் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்திய பொருட்களில் நிறைய எழுத்துகளை நாம் காண முடிகிறது. ஆனாலும் கல்வெட்டு எழுத்துகளைத் தெரிந்தவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கொடிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தன் அன்றாட நடைமுறை வாழ்வில் தமிழ் பிராமி எழுத்துகளைப் பயன்படுத்துவதுடன், பள்ளி மாணவர்களுக்கும் அந்த எழுத்துகளைக் கற்றுத் தருகிறார்.

இது குறித்து தலைமை ஆசிரியர் இளங்கோவன் கூறியதாவது: கடந்த 1987-ம் ஆண்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தேன். அப்போது கி.பி. 1-ம் நூற்றாண்டிலேயே தமிழ் பிராமி எழுத்துகள் முழுமை பெற்றிருந்தது தெரிய வந்தது. ஆங்கிலத்தில் பெரிய, சிறிய என 2 வகை எழுத்துகள் உள்ளன. சமஸ்கிருதத்திலும் 2 வகை எழுத்துகள் உள்ளன. அதேபோல தமிழிலும் இரட்டை எழுத்துகளைப் பயன்படுத்தலாம் என்பதற்காக தமிழ் பிராமி எழுத்துகளைப் பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய அன்றாட நாட்குறிப்புகளில் பிராமி எழுத்துகளையே பயன்படுத்துகிறேன். நண்பர்கள் 10 பேருக்கு இந்த எழுத்துகள் தெரியும். அவர்களுடனான கடிதம் உள்ளிட்ட எழுத்து தொடர்புக்கு தொடர்ந்து பிராமி எழுத்துகளையே பயன்படுத்தி வருகிறேன்.

தற்காப்புக்காக மாணவர் களுக்கு கராத்தே கற்று தருகிறேன். பயிற்சி பெறும் மாணவர்கள் அனைவருக்கும் பிராமி எழுத்திலேயே சான்றிதழ் வழங்குகிறேன். மிக எளிதான இந்த எழுத்துகளை 2 நாளில் கற்றுக் கொள்ளலாம் என்பதால் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பிராமி எழுத்துகளைக் கற்றுக் கொடுத்து வருகிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x