Published : 19 Jan 2023 04:30 AM
Last Updated : 19 Jan 2023 04:30 AM
திருச்சி: திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையே 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜன.29-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்குகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இடையே 37 கி.மீ தொலைவுள்ள ரயில் பாதையை ரூ.288 கோடி செலவில் அகல ரயில் பாதையாக மாற்றுதல் மற்றும் மின்மயமாக்கல் பணி மேற்கொள்ள தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இதையடுத்து அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை 20-1-2005 முதல் நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்ததை அடுத்து, கடந்த அக்.22-ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டதன் பேரில், இந்த வழித்தடத்தில் ஜன.29-ம் தேதி முதல் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.
அதன்படி, ஜன.29-ம் தேதி முதல் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம்அறிவித்துள்ளது. இந்த வழித்தடத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, மற்ற 5 நாட்களும் தலா 2 சேவைகள் அளிக்கப்பட உள்ளன. திருத்துறைப்பூண்டி ரயில்நிலையத்தில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் ரயில் 7.40 மணிக்கு அகஸ்தியம்பள்ளி சென்றடையும். மறு வழித்தடத்தில், காலை 7.55 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்பட்டு காலை 8.50 மணிக்கு திருத்துறைப்பூண்டி வந்தடையும்.
பின்னர், பிற்பகல் 3.30 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு அகஸ்தியம்பள்ளி சென்றடையும். மாலை 4.40 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு திருத்துறைப்பூண்டியை வந்தடையும். இந்த ரயில் கரியாப்பட்டினம், குரவப்புலம், நெய்விளக்கு, தோப்புத்துறை, வேதாரண்யம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த வழித்தடத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்க உள்ளது, அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT