Published : 18 Jan 2023 04:45 PM
Last Updated : 18 Jan 2023 04:45 PM

‘தேர்தலை செலவாக பார்க்கும் எண்ணமே தவறானது’ - ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து திமுக கருத்து

சென்னை: ‘தேர்தலை மக்களாட்சியின் மகத்துவமாகப் பார்க்காமல், செலவாகப் பார்க்கும் எண்ணமே தவறானது ஆகும். அதனால்தான் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை திமுக கடுமையாக எதிர்க்கிறது’ என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முரசொலி நாளேடு புதன்கிழமை வெளியிட்டுள்ள கட்டுரை: "நாடு முழுக்க ஒரே நேரத்தில் நடத்தப் போகிறோம் என்பது அடுத்த பசப்புகள். சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடந்தது. பாஜக ஆட்சி அமைந்துள்ளது. அதனைக் கலைக்கப் போகிறார்களா? இன்னும் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. அதைக் கலைக்கப் போகிறார்களா? இதனை பாஜக எம்எல்ஏக்களே ஏற்பார்களா? நடந்து முடிந்த மாநிலங்களைக் கலைத்து தேர்தல் நடத்துவதன் மூலமாக எத்தனை ஆயிரம் கோடி மீண்டும் செலவாகும்?

பாஜகவுக்கு தெரிந்த பாதை என்பது கொல்லைப்புற வழியாகும். சட்டமன்றங்களில் தான் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆளும் கட்சி உறுப்பினர்களை இழுத்து, ஆட்சியைக் கலைப்பது அதற்குத் தெரிந்த வழியாகும். அப்படி கவிழ்க்கப்பட்ட ஆட்சிக்கு எப்போது தேர்தல் நடத்துவீர்கள்? 5 ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்தா? அதுவரை அந்த மாநிலத்தை ஆளப் போவது யார்? அந்த மாநிலத்துக்குத் தேர்தல் நடத்துவதற்காக, ஒருவேளை நாடாளுமன்றத்தையே கலைத்து விடுவார்களா? அப்போது ஆகும் செலவை, பாஜகவின் பல்லாயிரம் கோடி கட்சி நிதியில் இருந்து கொடுப்பார்களா?

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதால் தனியாக செலவாகிறதே? அதனையும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டியதுதானே? பல்லாயிரம் கோடியை ஒவ்வொரு மாநில அரசும் சேர்ந்து செலவு செய்கிறதே? இதனை மிச்சம் பிடிக்க வேண்டாமா? இவர்களுக்கு தேர்தல் எதற்காக நடத்தப்படுகிறது என்ற அறிவே இல்லை. தேர்தல் என்பது மக்களுக்காக நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படவில்லை.

மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளைச் செலுத்துவதன் மூலமாக அதன் அடையாளங்களாக உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்புகிறார்கள். மக்களின் ஒற்றை வாக்குதான் அரசை வழிநடத்துகிறது என்பதைவிட அந்த ஒற்றை வாக்கின் அடித்தளத்தில் ஆட்சியானது நிற்கிறது. இதுதான் தேர்தல் ஆகும். தேர்தலை மக்களாட்சியின் மகத்துவமாகப் பார்க்காமல், செலவாகப் பார்க்கும் எண்ணமே தவறானது ஆகும். அதனால்தான் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை திமுக கடுமையாக எதிர்க்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது. நடைமுறை சாத்தியமற்றது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முதல்வரின் கடிதம் டெல்லியில் தேசிய சட்ட ஆணையத்தில் நேரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்துவதால் வாக்குப்பதிவு இயந்திரங்களிலும், சீட்டு வழங்கும் இயந்திரங்களிலும் பற்றாக்குறை ஏற்படும் என்று தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் ஒருமுறை கூறினார். இந்தியா முழுமைக்குமான பாதுகாப்பு என்பதே சாத்தியமில்லை. பாதுகாப்பு பணிக்காக வெளிமாநிலத்தில் இருந்து படைவீரர்கள் இங்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து பாதுகாப்பு பணிக்காக வெளிமாநிலம் செல்கிறார்கள். அதனால்தான் இரண்டு மூன்று கட்டங்களாக மாநிலத் தேர்தலே நடத்தப்படுகிறது. இவை எதுவும் தெரியாமல் செய்யப்படும் உளறல்தான் ஒரே தேர்தல் ஆகும்” என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலேயே இத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இத்திட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அரசின் செலவை குறைக்குமென அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக, தனது கருத்தை டெல்லியில் உள்ள சட்ட ஆணையத்தில் பதிவு செய்துள்ளது.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், சட்ட ஆணையத்தில் நேரடியாக அளித்தார். அதன் விவரம்: ஒரே நாடு ஒரே தேர்தலை 2024-ல் கொண்டுவர தீவிரம்: மத்திய அரசுக்கு திமுக கடும் எதிர்ப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x