Published : 18 Jan 2023 02:52 PM
Last Updated : 18 Jan 2023 02:52 PM
சென்னை: "ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்லி இந்த நாட்டையே அதிபர் ஆட்சி முறைக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எல்லாம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
பொதுவுடைமைத் தலைவர் ஜீவானந்தத்தின் நினைவு தினத்தையொட்டி சென்னை காசிமேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் புதன்கிழமை (ஜன.18) மரியாதை செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசனிடம் , ஒரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்லி இந்த நாட்டையே அதிபர் ஆட்சி முறைக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எல்லாம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2024-ல் சட்டசபைக்கும் சேர்ந்து தேர்தல் வந்தால் நல்லது என்று ஒரு குறுகிய சிந்தனையோடு நினைக்கிறார். தவறான சிந்தனை அது. அவர் அவ்வாறு கூறியிருக்கும் கருத்து, அவர் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளுக்கே புறம்பானது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா எல்லாம் இதனை ஏற்கவில்லை.
ஓர் ஒப்புக்காக, ஒரு வாதத்திற்காக அதை ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். 2024-ம் ஆண்டு தேர்தல் நடத்த உத்தேசிக்கும் மத்திய அரசு, அந்த ஆட்சி 5 ஆண்டு காலம் நீடித்து நிலைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதற்கு யார் உத்தரவாதம் தர முடியும்?” என்று அவர் கூறினார்.
முன்னதாக, நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலேயே இத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இத்திட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அரசின் செலவை குறைக்குமென அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக, தனது கருத்தை டெல்லியில் உள்ள சட்ட ஆணையத்தில் பதிவு செய்துள்ளது.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், சட்ட ஆணையத்தில் நேரடியாக அளித்தார். அதன் விவரம்: ஒரே நாடு ஒரே தேர்தலை 2024-ல் கொண்டுவர தீவிரம்: மத்திய அரசுக்கு திமுக கடும் எதிர்ப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT