Published : 18 Jan 2023 10:28 AM
Last Updated : 18 Jan 2023 10:28 AM
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜன.18) டெல்லி சென்றார். தமிழக விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று (ஜன.18) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது, தமிழக விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (ஜன.19) இரவு ஆளுநர் சென்னை திரும்புகிறார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 9-ம் தேதி ஆளுநர் உரையின்போது, தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தது சர்ச்சையானது. ஆளுநருக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதல்வர் வாசித்துக் கொண்டிருக்கும்போதே, ஆளுநர் பேரவையில் இருந்து வெளி யேறினார்.
இதைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு சம்பந்தமாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுகநாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை கடந்த 12-ம் தேதி சந்தித்தனர். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கொடுத்த அவர்கள், பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தனர். இதையடுத்து, கடந்த 13-ம் தேதி டெல்லி சென்ற ஆளுநர்ஆர்.என்.ரவி, 14-ம் தேதி இரவு சென்னை திரும்பினார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் இன்று (ஜன.18) காலை டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் ஆளுநர் தமிழக விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT