Published : 18 Jan 2023 05:39 AM
Last Updated : 18 Jan 2023 05:39 AM
சென்னை: தமிழகத்தில் வீடுகள், விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறி எனமானியம் பெறும் மின் இணைப்புகள் 2.67 கோடி உள்ளன.
இவ்வாறு மானியம் பெறும் திட்டங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது. வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதும், பலரும் அவசர அவசரமாக ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்தனர். இதன்படி, டிசம்பர் மாதம் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஆயிரக்கணக்கானவர்கள் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர். இந்த இடைப்பட்ட தேதிகளில் ஆதார் எண்ணை இணைத்தவர்களின் தகவல்கள் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு தகவல்கள் அழிந்து போன நுகர்வோரின் ஆதார் எண்ணை மீண்டும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, விடுபட்ட ஆதார் இணைப்பு எண்களுக்கு உரியவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.அத்தகைய மின் நுகர்வோர்மீண்டும் மின் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்றுஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதே சமயம், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் வந்து இணைத்தவர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT