Published : 17 Jan 2023 09:39 PM Last Updated : 17 Jan 2023 09:39 PM
மாஸ் காட்டிய பெண்கள் வளர்த்த காளைகள், பிடிபடாத பிரபலங்களின் காளைகள்... - மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்
மதுரை: வாடிவாசலில் ‘மாஸ்’ காட்டிய பெண்கள் வளர்த்த காளைகள் முதல், சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டும் அடக்கப்படாத பிரபலங்களின் காளைகள் வரை, மதுரை அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் கவனம் ஈர்த்தவற்றை விவரிக்கிறது இந்தத் தொகுப்பு.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, அன்பில் மகேஷ், சசிகலா, டிடிவி,தினகரன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு ஆர்வலர் முடக்காத்தான் மணி , ஜல்லிக்கட்டுபேரவை மாநில தலைவர் ராஜசேகர், நடிகர் சூரி ஆகியோரின் காளைகள், கரூர் விக்கி, அரியலூர் ரஞ்சித், வளையங்குளம் மூவேந்தன், இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான், புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழ்செல்வன், எம்.எஸ்.சுரேஷ் உள்ளிட்டோரின் காளைகள் வாடிவாசல் முன் நின்று விளையாடி பார்வையாளர்களை ரசிக்க வைத்தன.
இந்த காளைகளை பிடிக்க ஒருவர் கூட அருகே செல்லவில்லை. அந்தளவுக்கு காளைகள், வாடிவாசல் முன் நின்று கால்களை புழுதி பறக்க கிளறியபடி, கொம்புகளைக் காட்டி ஆக்ரோஷம் கொண்டு வீரர்களை மிரட்டியது. மாடுபிடி வீரர்கள் தடுப்புகளில் ஏறி பாதுகாப்பாக நின்று கொண்டனர்.
காளையை பிடிப்பவருக்கு வழக்கமாக அறிவிக்கப்படும் பரிசுகளை விட கூடுதல் பரிசுகளை ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் அறிவித்தனர். ஆனால், மாடுபிடி வீரர்கள் கடைசி வரை இந்த ஜல்லிக்கட்டு காளைகளை பிடிக்கவில்லை.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு தங்க காசுகள் அதிகளவில் பரிசாக வழங்கப்பட்டன. தங்க மோதிரம், கார்கள் உள்பட ஏராளமான பரிசுகளும் வழங்கப்பட்டன. இதனால் ஒவ்வொரு மாடுபிடி வீரரும், காளை உரிமையாளர்களும் வீட்டிற்கு ஏராளமான பரிசுகளை அள்ளி சென்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் பாலமேட்டை போல் 4 மாடுபிடி வீரர்கள் ஆள் மாறாட்டம் செய்து பனியனை மாற்றி காளைகளை பிடிக்க களம் இறங்கினர். போட்டி ஏற்பாட்டாளர்கள் அவர்களை, போலீஸாரை கொண்டு கண்டறிந்து எச்சரித்து அனுப்பினர்.
உலக சுற்றுலாப்பயணிகளுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட கேலரியில், அரசு துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வந்து அமர வைத்து விடுகின்றனர். இதனால், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் சுதந்திரமாக அமர்ந்து ஜல்லிக்கட்டுப்போட்டியை பார்க்க முடியவில்லை.
இதற்காக அவர்கள் முன்கூட்டியே சுற்றுலாத்துறையில் முன்பதிவு செய்து இந்த பயண ஏற்பாடுகளை திட்டமிட்டு வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருவதால்தான் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புகழ்பெற்றது. அவர்கள் மூலம் உலகம் முழுவதும் தமிழர்களின் இந்த வீர விளையாட்டும், பாரம்பரியமும் சென்றடைகிறது.
ஆனால், கேலரியில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. அதனால், ஒரு முறை வரும் சுற்றுலாப்பயணிகள் அடுத்த முறை வருவதில்லை. வருகின்ற காலங்களில் உலக சுற்றுலாப்பயணிகள் கேலரிகள் அவர்களை மட்டுமே அனுமதிக்கிற வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இந்தபோட்டியில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவிற்கு பெண்களால் வளர்க்கப்பட்ட காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டன.
சென்னகரம்பட்டி செல்வராணி, ஆனையூர் மாணவி தீப்தி, மதுரையை சேர்ந்த வேதா, ஆனையூர், ஐராவதநல்லூர் யோகதர்சினி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் வளர்த்த காளைகள் வெற்றிபெற்று பரிசுகளை தட்டிசென்றன.
இதில் வாடிவாசல் முன் துணிச்சலாக நின்று தான் வளர்த்த காளையை கரகோஷம் எழுப்பிய உற்சாகம் செய்த செல்வராணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விழா கமிட்டியினர் பாராட்டினர்.
WRITE A COMMENT