Published : 17 Jan 2023 09:16 PM
Last Updated : 17 Jan 2023 09:16 PM
புதுச்சேரி: "தமிழ்நாடு என்ற பெயரை இலகுவாக புறந்தள்ளிவிட முடியாது" என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.
ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம், ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா மற்றும் காணும் பொங்கல் விழா ஆகியவை துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்றது. இதில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஆரோவில் அமைப்பின் செயலர் ஜெயந்தி ரவி மற்றும் ஆரோவில், அரவிந்தர் சொசைட்டி, அரவிந்தர் ஆசிரம அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆரோவில் வளர்ச்சித் திட்டம் தொடர்பான காணொளி காட்சிப்படங்கள் திரையிடப்பட்டது.
நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: ‘‘நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற வேலையில், ஜி20 மாநாட்டை தலைமையேற்று இந்தியா நடத்துகிறது. விடுதலைப் போராட்ட காலத்தில் ஸ்ரீ அரவிந்தர், பாரதியார் போன்றோர் சுதந்திரத்துக்காக போராடினார்கள்.
அவர்களுடைய கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டியது அவசியம். அப்போதுதான் இந்தியா முன்னேறும். ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதி ஜனவரி 31-ம் தேதி புதுச்சேரியில் நடக்க இருக்கிறது. பொருளாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவை விவாதிக்கப்பட இருக்கிறது.’’என்றார்.
பின்னர் ஆளுநர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘துணைநிலை ஆளுநர்கள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் முதல்வர்கள், துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் துணைநிலை ஆளுநர்களின் பொறுப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு முதல்வர்கள் செயல்பட வேண்டும்.
எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம். தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகப் பெரிய சரித்திரம் இருக்கிறது. மிகப்பெரிய போராட்டத்துக்கு பிறகு அந்த பெயர் கிடைத்தது. அவ்வளவு இலகுவாக தமிழ்நாடு என்ற பெயரை புறந்தள்ளிவிட முடியாது. என்னைப் பொறுத்தமட்டில் நான் மக்களுக்காகத்தான் செயல்படுகிறேன்.
கோப்புகளை கோப்புகளாக பார்க்காமல் மக்கள் முகங்களாக பார்க்கிறேன். தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 அறிவிக்கப்பட்டு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் புதுச்சேரியில் அதை வரும் 23-ம் தேதி முதல்வரோடு சேர்ந்து தொடங்கி வைக்க இருக்கிறோம்.
மக்களுக்காக செய்வதில் எந்த பாரபட்சமும் புதுச்சேரியில் இல்லை. மக்களுக்கு எது நல்லதோ அதை செய்து கொண்டிருக்கிறோம். ஜி20 மாநாட்டுக்கு வருபவர்களுக்கு நமது கலாச்சாரம், தொன்மை, உணவு முறையை பற்றி தெரிவிப்பது மட்டுமல்லாமல், நமது நாட்டின் தொழில் வளர்ச்சி, பருவ நிலையில் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் பங்களிப்பு, ஸ்டார்ட் அப் போன்றவற்றில் இளைஞர்கள் எப்படி தொழில் தொடங்கி இருக்கிறார்கள் இதுபோன்ற நல்லவற்றை எடுத்துச் சொல்லி அவர்களும் அதை பின்பற்ற வேண்டும் என்ற கணிப்போடு இந்த மாநாடு நடைபெறுகிறது.’’என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT