Published : 17 Jan 2023 04:23 PM
Last Updated : 17 Jan 2023 04:23 PM
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 11 முதல் 17-ம் தேதி முதல் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் சாலைப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
சாலை விதிகளை மதிக்காமல் வாகனகத்தை இயக்குதல், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குதல், அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்டவை காரணமாக அதிக அளவு சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், இந்தியாவில் 2021-ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகள் தொடர்பான அறிக்கையை கடந்த டிசம்பர் மாதம் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 2021-ம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.
2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.
2021-ம் ஆண்டு நடந்த விபத்துகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,28,825, மாநில நெடுஞ்சாலைகளில் 96,382, மற்ற சாலைகளில் 1,87,225 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 56,007, மாநில நெடுஞ்சாலைகளில் 37,963, மற்ற சாலைகளில் 60,002 பேர் மரணம் அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் 1,17,765, மாநில நெடுஞ்சாலைகளில் 92,583, மற்ற சாலைகளில் 1,74,100 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் விபத்துகள் நடந்த மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 16,869 விபத்துகள் பதிவாகி உள்ளன. மரணங்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இதன்படி 5,263 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
அதிக வேகத்தில் செல்வதுதான் விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. இதன்படி, 2021-ம் ஆண்டில் 2,65,343 சாலை விபத்துகள் அதிக வேகத்தில் சென்றதால் நிகழ்ந்துள்ளது. இதில் 91,239 பேர் மரணம் அடைந்துள்ளனர். 2,55,663 பேர் காயம் அடைந்துள்ளனர். மொத்த விபத்துகளில் 60 சதவீத விபத்துகள் அதிக வேகம் காரணமாக நிகழ்கிறது. அதிக வேகம் காரணமாக தமிழகத்தில் 47,731 விபத்துகளில் 12,803 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதிலும் தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது.
தலைக்கவசம் அணியாத காரணத்தால் 46,593 பேர் மரணம் அடைந்துள்ளனர். 93,763 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் 4,898 ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணியாத காரணத்தால் மரணம் அடைந்துள்ளனர். இதிலும் தமிழகம்தான் முதல் இடம். சீட் பெல்ட் அணியாத காரணத்தால் 16,397 பேர் மரணம் அடைந்துள்ளனர். 39,231 பேர் காயம் அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT