Published : 17 Jan 2023 03:13 PM
Last Updated : 17 Jan 2023 03:13 PM
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 23 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்து வந்த மாடுபிடி வீரர் அபி சித்தர் காளையை அடக்கும்போது, போலீஸாரின் பாதுகாப்பு வேனில் தவறுதலாக மோதியதில் காயமடைந்தார்.
ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து முடிந்தநிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜன.17) தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இதுவரை 7 சுற்றுகள் முடிந்துள்ளது. 469 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. இதுவரை 225 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த 7 சுற்றுகளின் முடிவில், பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் 23 காளைகளை அடக்கி முதல் இடத்திலும், ஏனாதியைச் சேர்ந்த அஜய் 17 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்திலும், அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித் 10 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அபி சித்தர் காயம்: இந்தப் போட்டியில், சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் 23 காளைகளை அடக்கி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார். முன்னதாக இன்று காலையிலேயே அபி சித்தருக்கு காளை குத்தியதில், காலில் காயம் ஏற்பட்டிருந்தது. காலில் இருந்து ரத்தம் சொட்டியதைப் பார்த்த போட்டி அமைப்பாளர்கள், அமைச்சர் உள்ளிட்டோர் அவரிடம் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்றுவர அறிவுறுத்தினர். ஆனால், அவர் அதிகமான காளைகளை அடக்க வேண்டும் என்ற ஆவலில் தொடர்ந்து போட்டியில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், காளையைப் பிடிக்க முயன்றபோது அபி சித்தர் காவல் துறையின் பாதுகாப்பு வாகனத்தில் மோதி காயமடைந்தார். இதனால், மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அபி சித்தர், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT