Published : 17 Jan 2023 06:09 AM
Last Updated : 17 Jan 2023 06:09 AM

பரந்தூரில் அமையும் புதிய விமான நிலையத்துக்கு எதிராக 6 மாதங்களாக தொடரும் போராட்டம்: அரசு அறிவித்த மூன்று மடங்கு இழப்பீட்டை ஏற்க மறுப்பு

ஏகனாபுரம் பகுதியில் போராட்டம் நடந்துவரும் நாட்களின் எண்ணிக்கையை குறிக்கும் தகவல் பலகை.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பந்தூரில் அமைய உள்ள சென்னையின் 2-வது விமான நிலையத்துக்கு எதிராக பொதுமக்கள் 6 மாதமாக போராடி வருகின்றனர். மூன்று மடங்கு இழப்பீடு என்று ஆசை காட்டும் அரசு எங்களுக்கு அந்த பணத்தில் மூன்று மடங்கு நிலம் வாங்கித் தருமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. சுமார் 12 கிராமங்களில் இருந்து 4,500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுத்தப்பட உள்ளன. இந்த விமான நிலையத்தால் ஏகானாபுரம் மற்றும் சுற்றியுள்ள 4 கிராமங்கள் முழுவதுமாக கையகப்படுத்தப்பட உள்ளன. மேலும் 8 கிராமங்களில் பகுதி அளவு கையகப்படுத்தப்பட உள்ளன.

இந்த விமான நிலையம் அமைந்தால் 12 ஏரிகள், 11 குட்டைகள், 5 தாங்கல், 17 குளம் மற்றும் நீர்நிலைகள் அழிக்கப்படும் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏகனாபுரம், நாகப்பட்டு, மகாதேவி மங்கலம் ஆகிய கிராமங்களில் தலா 3 ஏரிகள் வீதம், 9 ஏரிகள் இந்த கிராமங்களில் கையகப்படுத்தப்பட உள்ளன.

இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும், பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் மாற்று இடம் அளித்தாலும் விவசாயம் செய்யும் அளவுக்கு இவர்கள் கொடுக்கும் இழப்பீட்டை கொண்டு நிலம் வாங்க முடியுமா, கால்நடைகளை வளர்க்க என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரு அங்குலம் நிலத்தை எடுக்க விடமாட்டோம். இறுதிவரை போராடுவோம் என்று கிராம மக்கள் பலரும் தெரிவித்தனர். மேலும் இந்தப் பகுதியில் விமான நிலையம் என்று அறிவித்த உடன் அருகாமையில் உள்ள பகுதிகளில் நிலங்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது.

இவர்கள் கொடுக்கும் இழப்பீட்டை கொண்டு அருகாமையில் உள்ள பகுதிகளில் எங்களால் சிறு துண்டு நிலம் கூட வாங்க முடியாது. விவசாயத்தையும், கால்நடையும் நம்பி வாழும் எங்களை ஏதேனும் வெளியிடங்களுக்கு அனுப்பினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என கூறினர்.

பந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் பகுதியில் கையகப்படுத்தப்பட உள்ள வீடுகள்.

இதுகுறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறும்போது, இந்தப் பகுதியில் பல ஏரிகளுக்கு கம்பக் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் 7 கி.மீ தூரம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்தப் பகுதியில் விமான நிலையம் வருவதால் அருகாமையில் 11 கி.மீ தூரத்தில் உள்ள ராஜாளி விமான படை விமான தளத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு எங்கள் பகுதி வழியாகத்தான் பறவைகள் செல்கின்றன. இங்கு விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் நம்பியே பொதுமக்கள் வாழ்கின்றனர். எனவே இறுதிவரைபோராடுவோம் என்றார்.

இந்த விமான நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரையாவிடம் கேட்டபோது, இந்த விமான நிலையம் தொடர்பாக அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. அரசணை பிறப்பிக்கப்பட பிறகே நிலம் கையகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் தொடங்கப்படும். இழப்பீடு விவகாரத்தில் மாற்றம் இருக்காது.

மூன்றரை மடங்கு இழப்பீடு என்பது சட்டப்படி அரசால் எற்கெனவே நிர்ணயிக்கப்பட்டது. நேரடி பேச்சுவார்த்தை மூலம் நிலத்தை வழங்கினால் மூன்றரை மடங்கு இழப்பீடு தரப்படும். இது சிறப்புத் திட்டம் என்பதால் பொதுமக்களுக்கு விரைவில் இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இழப்பீடு விவகாரத்தில் அலுவலர்களால் வேறு ஏதும் மாற்றம் செய்ய முடியாது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x