Published : 16 Jul 2014 09:11 AM
Last Updated : 16 Jul 2014 09:11 AM

பழங்குடியின மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்குகிறோம்- கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத் தலைவர் பெருமிதம்

‘‘பழங்குடியின மக்களின் பிள்ளைகளை பட்டதாரிகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத் தலைவர் கருப்புசாமி.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து சத்தியமங்கலத்தில், ‘கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம்’ (READ) என்ற அமைப்பை 13 ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதுவரை இந்த அமைப்பு என்ன சாதித்தி ருக்கிறது? கருப்புசாமியே விளக்குகிறார்.

‘‘கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வெளியில் வந்த நானும் எனது நண்பர்களும் அடிக்கடி போஸ்ட் கார்டு மூலம் எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம். அப்போதுதான், தலித் மற்றும் பழங்குடியின குழந்தை களின் கல்விக்காக ஏதாவது செய்தால் என்ன என்று சிந்தித்தோம். உடனே நண்பர்கள் 7 பேர் சேர்ந்து கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தை உருவாக்கினோம்.

முதல்கட்டமாக தாளவாடி, சத்தியமங்கலம், நம்பியூர், பவானி, டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 6 ஒன்றியங்களில் உள்ள தலித் மற்றும் பழங்குடியின குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு மாலை நேர பயிற்சி வகுப்புகளை தொடங்கினோம். 2 மணி நேரம் நடக்கும் வகுப்பில் தமிழ், கணிதம், ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க அந்தந்தப் பகுதி இளைஞர்களையே தன்னார்வலர்களாக நியமித்தோம். கூடவே சமுதாயம் சார்ந்த பாடல்கள், விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுத்தோம்.

பொதுவாக இந்தக் குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு ஒட்ட மாட்டார்கள்; ஒதுங்கியே இருப்பார்கள். அவர்களின் தாழ்வு மனப்பான்மையை போக்கு வதற்காக, பெங்களூரில் உள்ள மத்திய அரசின் ‘நிம்பன்ஸ்’ மனநல மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மூலம் கவுன்சலிங் கொடுக்கிறோம். பேராசிரியர்கள் எங்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள். அதை பிள்ளைகளுக்கு பயிற்றுவித்து அவர்களது கூச்சத்தை போக்கு வோம்.

தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க அரசே கட்டணம் செலுத்துகிறது. அதன்படி, இந்த ஆண்டு மட்டும் 6 யூனியன்களைச் சேர்ந்த 327 பேரை கல்லூரிகளில் சேர்த்திருக்கிறோம். முதல்முறையாக இந்த ஆண்டு எங்கள் பகுதிகளைச் சேர்ந்த அருந்ததியர் மாணவர்கள் நான்கு பேருக்கு மெடிக்கல் சீட் கிடைத்திருக்கிறது. இவர்கள் எங்களது மாலை நேர பயிற்சி வகுப்புகளில் படித்தவர்கள். கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் என்பதால் நான்கு பேருக்குமே கல்விக் கட்டணத்தை நன்கொடையாளர்கள் மூலம் நாங்களே வாங்கிக் கொடுத்திருக்கிறோம்.

பெரும்பாலான துப்புரவுப் பணியாளர்கள், தகுதிக்கு மீறி கந்துவட்டிக்கு கடன் வாங்கி குடித்துவிட்டு அவதிப்படுகின்றனர். அவர்களால் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிவிடக் கூடாது என்பதற்காக ‘விடியல் சொஸைட்டி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். இதில் சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் உள்ளிட்ட நகராட்சிகளைச் சேர்ந்த 320 துப்புரவு தொழிலாளர் குடும்பங்கள் உறுப்பினர்களாகி இருக்கிறார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரும் மாதம் 100 ரூபாயை கட்டாயம் சொஸைட்டிக்கு செலுத்த வேண்டும். அந்தப் பணத்தைக் கொண்டு அவர்களது குழந்தைகளின் படிப்புத் தேவைகள் உள்ளிட்டவைகளை கவனிக்க வைக்கிறோம். படிப்பைத் தொடர முடியாதவர்களுக்கு இட்லி, பேல்பூரி கடை வைக்கவும் அந்த நிதியிலிருந்து கடன் வாங்கித் தருகிறோம். வாரந்தோறும் ஏதாவதொரு கிராமத்தில் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் டாக்குமென்ட்ரி படங்களை திரையிடுவோம்.

எங்களது மாலை நேர பயிற்சி மையத்தில் படித்த சின்னையன், வழக்கறிஞராகி இருக்கிறார். நான்கு பெண்கள் நர்ஸ்களாகவும் இன்னொருவர் டீச்சராகவும் உள்ளனர். ஒருவர் ஈரோட்டில் சின்னதாக டெக்ஸ்டைல் கம்பெனி வைத்திருக்கிறார். எங்களிடம் படித்தவர்கள் அனைவரையும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை வரவழைத்து அவர்களது அனுபவங்களையும் எதிர்கால திட்டங்களையும் பகிர்ந்து கொள்வோம்.

ஹாஸ்டலில் களி தின்று வளர்ந்த எனக்கு பசியின் கொடுமையும் படிப்பின் அருமையும் தெரியும். ஆனால், இந்த அருமை புரியாமல் என் பெற்றோரைப் போலவே அருந்ததியர் மற்றும் பழங்குடியின மக்களில் பலர் தாங்களும் கொத்தடிமைகளாக இருந்துகொண்டு தங்களது பிள்ளைகளையும் படிக்க வைக்காமல் முடக்கிப் போட்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளை முன்னேற்றும் வேலையில்தான் நானும் எனது நண்பர்களும் ஈடுபட்டிருக்கிறோம்.

தற்போது 6 யூனியன்களைச் சேர்ந்த சுமார் 3,500 குழந்தைகள் எங்களது கண்காணிப்பில் படித்துக் கொண்டிருக்கின்றனர். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு அவர்களை தயார்படுத்துவதற்கான பயிற்சி மையம் ஒன்றை தொடங்குவதுதான் எங்களின் அடுத்த திட்டம்’’ என்றார் கருப்புசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x