Published : 16 Jan 2023 08:31 PM
Last Updated : 16 Jan 2023 08:31 PM
புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கமும், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயகுமாரும் சரியாக செயல்படவில்லை என நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
புள்ளி விவரங்கள் அளிப்போர் யார்? - எம்.பிக்களின் செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை பி.ஆர்.எஸ் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்து சேகரித்து அவற்றை இணையத்தில் (www.prsindia.org) பதிவேற்றி வருகிறது. பி.ஆர்.எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளைக் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் எனும் தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. அந்த அறிக்கை என்ன கூறுகிறது என்பதை தற்போது பார்ப்போம்.
செயல்பாடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பிரச்சினை குறித்து அவையில் தாங்களே எழுப்பி பேசும் சுயமுயற்சி விவாதங்கள் (Initiated debates), அவையில் அவர்கள் எழுப்பும் கேள்விகள், அவையில் அவர்கள் கொண்டு வரும் தனிநபர் மசோதாக்கள் ஆகிய 3 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உறுப்பினர்களின் செயல்பாடுகள் மதிப்பிடப்படுகின்றன. இந்த மூன்றின் கூட்டுத் தொகை புள்ளிகளாக குறிப்பிடப்படுகின்றன.
குறைந்த புள்ளிகள் பெற்றவர்கள்: தமிழக எம்.பிக்களில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்(திமுக) 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறார். திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஜெயகுமார்(காங்கிரஸ்) 34 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்கு முந்தைய இடத்தில் இருக்கிறார்.
குறைந்த கேள்விகள் பிரிவு: தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், 2019ல் இருந்து இதுவரை ஒரு கேள்வியையும் எழுப்பவில்லை. திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஜெயகுமார் 9 கேள்விகளை எழுப்பி கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் உள்ளார்.
சுயமுயற்சி விவாதங்கள்: தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 4 சுயமுயற்சி விவாதங்களில்(Initiated debates) பங்கேற்று தமிழக எம்.பிக்களில் விவாதங்களில் கடைசி இடம் பிடித்துள்ளார். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் 5 சுயமுயற்சி விவாதங்களில் பங்கேற்று கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் உள்ளார்.
தனிநபர் மசோதாக்கள்: மக்களவையில் ஒரு தனிநபர் மசோதாகூட கொண்டுவராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இருக்கிறார்கள். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் சிகாமணி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பி. ரவீந்திரநாத் குமார், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ்;
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. சண்முகசுந்தரம், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேலுசாமி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.செல்லகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஜெயகுமார், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
மாநிலங்களவையில் செயல்பட தவறியவர்கள்: தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களில் கடந்த ஆண்டு செயல்பட தவறியவர்கள் குறித்து தற்போது பார்ப்போம். தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களில் 4 பேரின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் செயல்படவே இல்லை என்பதை புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
இவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு அவையில் எவ்வித கேள்வியையும் கேட்கவில்லை; விவாதத்தையும் எழுப்பவில்லை; தனிநபர் மசோதாவையும் கொண்டுவரவில்லை. அந்த 4 பேர் யார் என்பது குறித்து தற்போது பார்ப்போம். அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம், என். சந்திரசேகரன், ஆர். தர்மர், திமுகவைச் சேர்ந்த பி. செல்வராசு ஆகியோரே அந்த நால்வர். இவர்களை கடைசி இடத்தில் இருப்பவர்கள் என்று குறிப்பிட்டால், கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் இருப்பவர் ப. சிதம்பரம். இவர் 4 சுயமுயற்சி விவாதங்களை மட்டுமே எழுப்பி உள்ளார். இவர் அவையில் கேள்வி எதையும் கேட்கவில்லை; தனிநபர் மசோதாவையும் கொண்டுவரவில்லை.
முழுமையான பட்டியல்: > தமிழக மக்களவை எம்.பி.க்களின் செயல்பாடு | தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களின் செயல்பாடு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT