Published : 16 Jan 2023 06:51 PM
Last Updated : 16 Jan 2023 06:51 PM
சென்னை: பாலமேடு மற்றும் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது, எதிர்பாராதவிதமாக உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (16.1.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அரவிந்தராஜ் (24) என்பவரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டு பகுதி சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் கிராமம், கண்ணகோன்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் அரவிந்த் (25) என்பவரும் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனை உற்றேன்.
இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மதுரை மாவட்டம் பாலமேட்டில் திங்கள்கிழமை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், 9 காளைகளை அடக்கிய பாலமேடு கிழக்கு தெருவைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் காளை முட்டியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், திருச்சி மாவட்டம் சூரியூரில் திங்கள்கிழமை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது, பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்த காளை முட்டியதில், காளமாவூரைச் சேர்ந்த அரவிந்த் (25) என்ற இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT