Published : 09 Jul 2014 12:02 PM
Last Updated : 09 Jul 2014 12:02 PM

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை சீரழிவிலிருந்து மீட்க வேண்டும்: ராமதாஸ்

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை சீரழிவிலிருந்து மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைத்து விட்டதாக தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் செம்மொழி தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன? என்று பார்த்தால் ஏக்கப் பெருமூச்சு தான் மிஞ்சும். தமிழ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் நிர்வாகக் குளறுபடிகளாலும், தமிழ் எதிரிகளாலும் முடக்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணமாகும்.

தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என தமிழகத்திலுள்ள தமிழர்கள் பல ஆண்டுகளாக போராடிய போதிலும் அந்தக் கோரிக்கை நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமலேயே இருந்து வந்தது. தமிழுக்கு செம்மொழித் தகுதியை பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதி அளித்து 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. தேர்தலில் வென்ற பின், மத்தியில் அமைந்த மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசை வலியுறுத்தி தங்களின் வாக்குறுதியை இக்கட்சிகள்நிறைவேற்றின. இதையடுத்து தமிழ் குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கடந்த 2007 ஆம் ஆண்டில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் தமிழ் குறித்து சொல்லிக்கொள்ளும்படி எந்த ஆராய்ச்சியையும் இந்நிறுவனம் நடத்தவில்லை என்பது தான் சோகம்.

செம்மொழி நிறுவனத்தின் இத்தகைய அவல நிலைக்கு காரணம் அதற்கு தகுதியான தலைமை அமையவில்லை என்பது தான். இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதற்கு நிரந்தர இயக்குனர் அமர்த்தப்படவில்லை. தற்காலிக இயக்குனர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பலருக்கும், தமிழுக்கும் எந்த தொடர்பும் இருக்கவில்லை. செம்மொழி நிறுவனம் தமிழ் தொடர்பான ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்டது என்ற வகையில், தமிழாய்ந்த தமிழறிஞர் ஒருவர் தான் அதற்கு இயக்குனராக நியமிக்கப்பட வேண்டும்.

ஆனால், இதை தமிழாய்வு நிறுவனமாக பார்க்காமல் மத்திய அரசு நிறுவனமாகவே பார்க்கும் அதிகாரிகள், தமிழகத்திலுள்ள மத்திய அரசு அதிகாரிகளில் ஒருவரை பொறுப்பு இயக்குனராக நியமிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில் தமிழ் தெரியாத அதிகாரிகள் பலர் இதன் பொறுப்பு இயக்குனர்களாக இருந்துள்ளனர்.

இப்போது பொறுப்பு இயக்குனராகவுள்ள பூமா என்பவர் தொடர்வண்டித்துறை அதிகாரி ஆவார். தமிழை படிக்காத இவரைப் போன்றவர்கள் தமிழாராய்ச்சியை திறம்பட நடத்துவார்கள் என்று எந்த அடிப்படையில் மத்திய அரசு நம்புகிறது என்பது தெரியவில்லை.

தமிழாய்வு நிறுவனத்திற்கு பொறுப்பு இயக்குனர்களாக நியமிக்கப்படுபவர்கள் தமிழை வளர்ப்பதற்கு பதிலாக தங்களை வளர்ப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிறுவனத்தின் பதிவாளர், நிதி அலுவலர் ஆகிய பதவிகளுக்கு பொறுப்பு அதிகாரிகளே நியமிக்கப்பட்டிருப்பதால் அவர்களும் இயக்குனருடன் இணைந்து கொண்டு நிறுவனத்தை சீரழிப்பதில் தீவிரமாக உள்ளனர். ஊழியர்கள் நியமனம், கட்டுமானப் பணி ஒப்பந்தம் போன்றவற்றில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. பணியாளர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க முடியாது என்று அறிவித்துள்ள இவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தியும், பதவி உயர்வு வழங்கியும் அழகு பார்க்கிறார்கள். அதேநேரத்தில் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து, முறைப்படி தேர்வாகி பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளர்களை தொடர்ந்து அதேநிலையிலேயே வைத்துள்ளனர்.

இவர்களின் 10 கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கடந்த ஆண்டு வாக்குறுதி அளித்த நிர்வாகம் இன்று வரை ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றவில்லை. அதுமட்டுமின்றி, நீதிகேட்டு நீதிமன்றம் சென்ற பணியாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

நிர்வாகச் சீரழிவுகள் காரணமாக 12 துறைகளுடன் செயல்பட்டு வந்த செம்மொழி நிறுவனம், இப்போது 7 தற்காலிக ஆய்வுகளை நடத்தும் அமைப்பு என்ற நிலைக்கு சுருங்கிவிட்டது. இந்த நிறுவனத்திற்கு முழுநேர இயக்குனர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெற்று நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியுள்ள தமிழறிஞர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுவிட்ட போதிலும், அவரை பணியமர்த்த விடாமல் பொறுப்பு இயக்குனரும், மற்ற அதிகாரிகளும் தடுத்துவருவதாக குற்றச்சாற்றுக்கள் எழுந்திருக்கின்றன.

தமிழை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்ட செம்மொழி நிறுவனம் சீரழிந்து வருவதை அனுமதிக்க முடியாது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மாற்றுப்பணி முறையில் பணியாற்றி வரும் இயக்குனர், பதிவாளர், நிதி அலுவலர் ஆகியோரை அவர்களின் சொந்தத் துறைக்கு அனுப்பிவிட்டு தமிழாய்ந்த அறிஞர்களை முழுநேர இயக்குனராகவும், பதிவாளராகவும் நியமிக்க வேண்டும். அந்த நிறுவனத்தில் உள்ள தினக்கூலி பணியாளர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x