Published : 15 Jan 2023 06:10 PM
Last Updated : 15 Jan 2023 06:10 PM
மதுரை: மதுரை அவனியாபுரத்தில் இன்று(ஜன.15) நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் விஜய்க்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவையாகும். இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பொங்கல் தினமான இன்று நடைபெற்றது.
அரசுத் தரப்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழுவும், அவனியாபுரத்தைச் சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவும் இணைந்து இந்தப் போட்டிகளை நடத்தினர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க 1004 காளைகளும், 318 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
11 சுற்றுப் போட்டிகள் நிறைவு: காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. 11 சுற்றுகளாக நடந்த இந்தப்போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்ததது. சுற்றுக்கு தலா 25 வீரர்கள் வீதம் 250 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த இந்தப்போட்டியில் 737 காளைகள் அவிழ்க்கப்பட்டன.
கார் பரிசு: இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், 28 காளைகளை அடக்கிய ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய் என்பவருக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. முதல் பரிசு வென்ற விஜய் மின்வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வருகிறார். 17 காளைகளைப் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளைப் பிடித்த விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பாலாஜி மூன்றாம் பரிசு பெற்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT