Published : 15 Jan 2023 02:10 PM
Last Updated : 15 Jan 2023 02:10 PM

2021 அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் வென்ற வீரருக்கு சாதகமாக தீர்ப்பு: கார் பரிசு வழங்கிய ஆர்.பி.உதயகுமார்

ஜல்லிக்கட்டு வீரர் கண்ணனுக்கு கார் பரிசளிப்பு

மதுரை: அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கடந்த 2021ம் ஆண்டு வெற்றி பெற்ற மாடுபிடி வீரருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கார் பரிசினை அளித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 12 மாடுகளைப் பிடித்த மதுரை விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், அவரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கண்ணன் வெற்றி பெற்றது உறுதிப்படுத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) கார் பரிசளிக்கப்பட்டது.

அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் மாடுபிடி வீரர் கண்ணனுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காரினை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், ''மாடுபிடி வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கார் பரிசளிக்கும் வழக்கத்தை தொடங்கிவைத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வழக்கு காரணமாக கண்ணன் மற்றும் மணி ஆகிய இருவருக்கும் கார் பரிசளிப்பது முன்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைகிங்க, தற்போது கண்ணனுக்கு கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்ட நிலையில், அதனை மீட்டெடுத்த பெருமை அதிமுக அரசுக்கு உண்டு. அலங்காநல்லூர் வாடிவாசல் உலகப் பிரசித்திபெற்றது. இங்கு களம் காணுகிற அந்த காளைகளுக்கு மிகப்பெரிய சிறப்புகள் உண்டு. ஆனால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒரு அரங்கத்துக்குள் அடக்கி விடுவார்களோ என்கிற அச்சம் இந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த கிராமத்தில் உள்ள காவல் தெய்வத்தை வணங்கி விட்டுதான், ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கும். ஆனால், அந்த வழக்கம் தொடருமா என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இதுவரை வழங்கப்படவில்லை. இதேபோல், ஒலிம்பிக் விளையாட்டில் தமிழக வீரர்கள் பங்கேற்கும் நோக்கில் தமிழகத்தின் நான்கு பகுதிகளில் ஒலிம்பிக் அக்காடமிகள் திறக்கப்படும் என்றும், விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உயர்நிலைப் பயிற்சி ஊக்கத்தொகை, போட்டிகளுக்குச் சென்று வர பயணச் செலவு உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் சென்னையில் பிரமாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்படம் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்புகளை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது வெளியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அலங்கநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு நடைபெற்றபோது, உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது அமைச்சராகி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு வர இருக்கிறார். விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி, இளைஞர்களை ஏமாற்றாமல் அறிவிப்புகளை வெளியிட்டால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x