Published : 15 Jan 2023 05:45 AM
Last Updated : 15 Jan 2023 05:45 AM

சட்டப்பேரவை சபாநாயகர் - ஆளுநர் இடையே முரண்பாடு: 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் ஒரு பிளாஷ்பேக்

கே.கே.ஷா மற்றும் கருணாநிதி

‘தி இந்து’ ஆவணக் காப்பகத்திலிருந்து..

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் தனது உரையில் சில வரிகளை படிக்காமல் விட்டதன் தொடர்ச்சியாக, அரசு - சபாநாயகர் - ஆளுநர் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதேபோன்ற ஒரு ‘பிளாஷ்பேக்’ சம்பவம் சரியாக 50 ஆண்டுகளுக்கு முன் 1972 நவம்பரில் நடந்துள்ளது.அப்போதும் திமுக ஆட்சிதான். முதல்வராக இருந்தவர் மு.கருணாநிதி.அப்போது ஆளுநராக இருந்தவர் கே.கே.ஷா. இப்போது, ஆளுநருக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கு எதிராக, முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆளுநர் செயல்பட்டார். இந்த சம்பவத்தை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் பதிவு செய்துள்ளது.

1972 நவம்பர் 13-ம் தேதி: திமுக-விலிருந்து எம்ஜிஆர் தலைமையில் ஒரு பிரிவினர் விலகி அதிமுக-வை ஆரம்பித்த சமயம், மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக திமுக அரசு மீது அப்போதைய சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது தமிழக சட்டப்பேரவை தலைவராக இருந்த கே.ஏ.மதியழகன், சட்டப்பேரவை டிசம்பர் 5-ம் தேதி வரை ஒத்தி வைத்தார். முன்னதாக, முதல்வராக இருந்த மு.கருணாநிதியிடம், ஆளுநரிடம் கூறி சட்டப்பேரவையை கலைத்துவிட்டு, இடைத்தேர்தல் மூலம் மீண்டும் மக்களை சந்தித்து அரசமைக்கும்படியும் இந்த அசாதாரண சூழலில் இது ஒன்றுதான் தீர்வு என்றும் பேரவைத் தலைவர் மதியழகன் தெரிவித்தார். ஆனால்,முதல்வர் மு.கருணாநிதி இதை ஏற்கவில்லை. முழு பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த அவர் நாங்கள் மக்களை 1976-ம் ஆண்டு தான் சந்திப்போம் என்று தெரிவித்தார்.

நவ. 14-ம் தேதி: தமிழக ஆளுநர் கே.கே.ஷா, அப்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரை நவ. 15-ம் தேதி காலை முடித்து வைத்து உத்தரவிட்டார். இந்த தகவல் நவ.14-ம்தேதி மாலை ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியானது. திமுக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை டிசம்பர் 5-ம் தேதி விவாதத்துக்கு எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், சட்டசபையை முடித்துவைத்து ஆளுநர் வெளியிட்ட உத்தரவு சர்ச்சையை உருவாக்கியது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.கருணாநிதி, “அரசின் ஆலோசனைப்படி, ஆளுநர் சட்டப்பேரவை கூட்டத்தை முடித்து வைத்துள்ளார். பேரவை மீண்டும் கூடும் தேதி பின்னர் முடிவெடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டுள்ளதால், பேரவையில் நிலுவையில் உள்ள சட்ட முன்வடிவுகள் தவிர்த்து இதர நோட்டீஸ்கள் மற்றும் அலுவல்கள் அனைத்தும் காலாவதியாகிவிடும். அத்துடன் பேரவைத் தலைவரை நீக்க வேண்டும்என்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானமும் இதன் மூலம் காலாவதியாகிவிட்டது. இனி புதியதாக ஒரு தீர்மானத்தை கட்சி உறுப்பினர்கள் கொண்டுவர வேண்டும். இதையடுத்து, பேரவைத் தலைவர் மதியழகன் ஆளுநரை சந்தித்து, எந்த சூழலில் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது என்பதை தெரிவித்தார்.

அன்றே ‘தி இந்து ’ நாளிதழில் வெளியான சிறப்பு செய்தியில், ஆளுநர் கே.கே.ஷா, சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைக்கும் முன்னதாக, அப்போதைய பிரதமரிடம் தெரிவித்த பின்னரே அறிவித்தார். அரசியலமைப்பு சட்டப்படி, ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படியே சட்டப்பேரவையை ஒத்தி வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் அவர் இயல்பாகவே நடந்து கொண்டுள்ளார். இதன் மூலம், டிச.5-ம் தேதிக்கு முன்னரே சட்டப்பேரவையை கூட்டும் வாய்ப்பை முதல்வருக்கு அளித்துள்ளது. ஆனால், பேரவைத் தலைவர் தற்போதைய மனநிலையில் பேரவை நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிப்பாரா என்பது தெரியவில்லை. விதிகள்படி, சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் இருக்கும்போது வேறுயாரும் அவைகளின் நடவடிக்கைகளை நடத்த இயலாது. பேரவைத் தலைவர் அவைக்கு வராமல் இருந்தால் மட்டுமே துணைத் தலைவர் அவையை நடத்த முடியும்.

பேரவைத் தலைவரை பொறுத்தவரை பேரவையை ஒத்தி வைக்க முழு அதிகாரம் உள்ளது. ஆளுநரின் அதிகாரத்தில் அரசியல் இல்லை. அவர் அவையின் மரபுகள், உரிமைகளுக்கு பாதுகாவலர் தற்போதைய சூழலில், பேரவைத் தலைவருக்கு எதிரானநம்பிக்கையில்லா தீர்மானம் என்னவாகும் என்ற சந்தேகம் உள்ளது. ஒருவேளை கூட்டத்தொடரை முடித்துவைக்க வேண்டும் என்ற அமைச்சரவையின் ஆலோசனையை ஆளுநர் ஏற்காமல் இருந்தால், ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையில் மோதல் உருவாகியிருக்கும். இந்த நிலை ஏற்பட மத்தியஅரசும் விரும்பவில்லை.

நவ. 16-ம் தேதி: சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைத்த ஆளுநர்கே.கே.ஷாவின் நடவடிக்கைக்கு எதிராகஅவரது அறிவிக்கைக்கு தடை விதிக்கும் படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரவைத் தலைவர் கே.ஏ.மதியழகன் மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஜி.ஆர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி டி.ராமபிரசாத ராவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் சட்டப்பேரவையை முடித்து வைப்பதில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து பஞ்சாப் மாநிலம் மற்றும் சத்யபால் இடையிலான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டினார்.

மேலும், இந்த மனுக்கள் அரசியலமைப்பு சட்டத்தின் கூறுகளை கொண்டிருப்பதால், தலைமை நீதிபதியின் அமர்வில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றார். மனுக்களில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யவேண்டும். அடுத்த உத்தரவை பிறப்பிக்கும் வரை, தற்போதைய நிலையே தொடரஅனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

நவ. 21-ம் தேதி: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆளுநரின் உத்தரவுக்கு எதிரான வழக்கில்,ஆளுநர் தனது எதிர்மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் அரசியலமைப்பு சட்டத்தின் 361-வது பிரிவின்படி, மாநிலஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, அவரது கடமைகள் குறித்து கேள்வி எழுப்ப நீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆளுநருக்கு எதிராகநீதிமன்றத்தால் ‘ரிட்’ உத்தரவு பிறப்பிக்கமுடியாது. சட்டப்பேரவையை முடித்து வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. அத்துடன், சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பான விஷயத்தில், வேறு எந்த வழியும் இல்லாததால் பேரவைமுடித்து வைக்கப்பட்டது. மாநில அரசின் பரிந்துரைப்படியே ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். எனவே, உத்தரவுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

நவ.22-ம் தேதி: உயர் நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிரான வழக்கில், ஆளுநர்சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.கே.நம்பியார், “ஆளுநரின் தனிப்பட்ட விருப்புரிமை அதிகாரங்களை மறுக்க முடியாது. ஆங்கி லேயர் காலத்தில் இருந்து இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன’’ என தெரிவித்தார். அப்போது, தலைமை நீதிபதி, ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் குறித்துகேள்வி எழுப்பினார். அப்போதுபதிலளித்த நம்பியார், “அரசியலமைப்பு 174-ன் படி ஆளுநருக்கு சட்டப்பேரவையை கூட்டுதல், முடித்துவைத்தல், கலைக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆளுநர்அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டியவராக இருந்தாலும் கூட, சில அரிதிலும் அரிதான நேரங்களில், இங்கிலாந்தில்பின்பற்றப்படும் மரபுகளை இங்கும் பின்பற்றி சுயமாக முடிவெடுக்க அனுமதிக்கப்படுகிறார்.

அமைச்சரவை ஆளுநருக்கு அனுப்பும் பரிந்துரைகளை ஏற்பதும், நிராகரிப்பதும் ஆளுநரின் தனிப்பட்ட விருப்புரிமை. குடியரசுத் தலைவருக்கு இருக்கும் அதிகாரம் போன்றே மாநிலத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆளுநருக்கும் உண்டு. உச்ச நீதிமன்ற முடிவின்படி, ஆளுநர் விருப்புரிமை அதிகாரங்கள் அரசியலமைப்பு சட்டத்தை திருப்திப்படுத்தும் விதமாகத்தான் இருப்பதாக கூறியுள்ளது. அவர் அமைச்சரவையின் ஆலோசனையை பெறும் அதிகாரங்களும் அதன்படியே உள்ளன. அவர் சுய விருப்பத்துக்காக எதையும் செய்யமுடியாது. ஒரு வேளை 356-ம்சட்டப்பிரிவை பயன்படுத்துவதாக இருந்தால், குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும். ஆனால், நல்ல எண்ணத்துடன் செயல்பட்டாரா இல்லையா என்பதைத்தான் பார்க்க முடியும். அதே நேரம் நீதிமன்றத்தால் கேள்விகேட்க முடியாதபடி ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

டிச.4-ம் தேதி: தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வு என்பது ஆளும் திமுகவுக்கும் அங்கிருந்து பிரிந்து சென்றவர்களுக்கும் இடையிலான சம்பவமாகும். இது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும், ஆளுங்கட்சியினர் அல்லது வேறு எந்த ஓர் உறுப்பினருக்கும் பேரவைத் தலைவர் அல்லது அரசின் மீதோநம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கு தனிப்பட்ட உரிமை உண்டு. ஆனால் எந்த ஒரு காரணமும் இல்லாமல் பேரவைத் தலைவர் மதியழகன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அது பேரவை கூட்டம் முடித்து வைக்கப்பட்டதால் தள்ளுபடியானது.

ஆனால், பேரவைத் தலைவர் இருக்கும்போது, பேரவை துணைத் தலைவர் அவையின் நிகழ்வுகளை நடத்துவது ஆச்சரியமாகஇருந்தது. இந்நிலையில், பேரவைத் தலைவர் பதவியில் இருந்து மதியழகன் நீக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

டிச. 11-ம் தேதி: சட்டப்பேவையில் நவ.13-ம் தேதி நடைபெற்ற நிகழ்வுகள், அவற்றின் பின்னணி குறித்து முதல்வரின் பரிந்துரையை தான்கவனமாக பரிசீலித்த பின்னரே சட்டப்பேரவை கூட்டத்தை முடித்து வைத்து உத்தரவிட்டதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆளுநரை பொறுத்தவரை அரசியலமைப்பு சட்டப்படி, சட்டப்பேரவையை முடித்து வைப்பது அவரின் அதிகாரத்துக்கு உட்பட்ட ஜனநாயக நடைமுறையாகும். பேரவைத் தலைவரின் சட்டப்பேரவை உரையில், தேர்தலை சந்தித்து மக்களின் நம்பிக்கையை பெறும்படி அரசிடம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தை தள்ளி வைத்த நிகழ்வு விதிப்படி நடைபெறவில்லை. அரசின் மீதான நம்பிக்கையின்மை என்பது அவையில், ஆளுங்கட்சியின் பெரும்பான்மை மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம், பேரவை விதிகளில் வேறு வகையில்நிரூபிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. பேரவை செயலரால் வழங்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் விவரத்தை பொறுத்தவரை எந்த முரண்பாடும் இல்லை. எனவே, ஆளுநர் சரியானவகையில்தான் பேரவையை முடித்து வைத்துள்ளார் என்பது தெளிவாகிறது.

எனவே, நவம்பர் 14-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைத்து ஆளுநர் வெளியிட்ட உத்தரவுக்கு எதிராக பேரவைத் தலைவர் கே.ஏ.மதியழகன், எம்ஜிஆர், கே.டி.கே.தங்கமணி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை, உயர் நீதிமன்ற முழு அமர்வு தள்ளுபடி செய்ததுடன், முதல்வரின் ஆலோசனைப்படி தனது கடமையை ஆளுநர் ஆற்ற வேண்டும் என்பது சட்ட விதி. இந்த விஷயத்தில் அந்த சட்ட விதியை ஆளுநர் பின்பற்றி உள்ளார். அவரது நல்ல நோக்கம் குறித்து கேள்வி எழுப்பவும் எந்த முகாந்திரமும் இல்லை என்பது தெளிவாகிறது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x