Published : 15 Jan 2023 05:22 AM
Last Updated : 15 Jan 2023 05:22 AM
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மக்களுக்கு உணவளிக்கும் வேளாண் தொழிலுக்கு உதவும் சூரியன், விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகையாகும்.
இதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தாய்த் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். பொங்கல் திருநாளை மக்கள் ஏற்றத்துடன் கொண்டாட ரூ.1,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, செங்கரும்பு எனப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியுள்ளோம். சாதி, மதப் பாகுபாடுகள் இல்லாமல், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடும் சமத்துவப் பொது விழாவாகவே பொங்கல் பண்டிகை திகழட்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலவட்டும். அனைவருக்கும் உடல் நலத்தையும் மகிழ்ச்சியையும் தரட்டும். விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை சேர்க்கட்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பொங்கல் திருநாளில் தீய எண்ணங்கள், பொறாமை, அறியாமை, ஆணவம் அகன்று, நாட்டில் நன்மை செழிக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும். அனைத்து வீடுகளிலும் இன்பமும், வளமும் செழிக்கட்டும் என வாழ்த்துகிறேன்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழர்களின் உரிமைகள், பண்பாடு, தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கு உரிய சூழல், வரும் பொங்கல் புத்தாண்டில் நிச்சயம் தொடங்கும். தமிழ் மக்கள் அனைவருக்கும் மனங்கனிந்த பொங்கல், புத்தாண்டு வாழ்த்துகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: கல்வி, தொழில், வணிகம், சமூகநீதி உள்ளிட்ட அனைத்திலும் தடைகளைத் தகர்த்து, புதிய வழிகளை தைத்திருநாள் உருவாக்கித் தர வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: சவால்களை வென்று வாழும் தமிழர் வாழ்வில் சனாதனத்துக்கு இடமில்லை. தமிழ்நாடு முழுவதும் கட்சி அலுவலகங்களிலும், இல்லங்களிலும் பொங்கலிட்டும், தமிழ்நாடு வாழ்க என்று குலவையிடுவோம் மகிழ்வோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பிற்போக்குச் சிந்தனைகளையும், ஆணாதிக்கத்தையும், சாதி அழுக்குகளையும் போகியில் பொசுக்கி, நல்லதொரு முன்னேற்றமான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்போம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இனிய பொங்கல் திருநாளில் விவசாயிகளின் வாழ்வில் இன்னல் நீங்கி, மகிழ்ச்சி மலர வேண்டும். மக்கள் மனதில் இருள் நீங்கி, இன்பம் பொங்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: வருங்காலங்களில் உழவுத் தொழில் மேம்பட, உழவர்களின் வாழ்க்கைத் தரம் உயர, வளமான தமிழகம் உருவாக பொங்கல் திருநாளில் இறைவனின் ஆசி கிடைக்கட்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: பொங்கல் திருநாளில் மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கவும், அதைக் காப்பாற்றவும் உறுதியேற்போம்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: பொங்கல், தைப் புத்தாண்டில் வளம் தழைத்துப் பொங்கட்டும், இன்பம் தொடரட்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: மக்கள் நலம், மண் வளம், அமைதி, அன்பு, சகோதரத்துவம் செழிக்க வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: சூரியனை, கால்நடைச் செல்வத்தை, வேளாண் அறிவைக் கொண்டாடும் பொங்கல் நாளுக்காக அனைவரையும் வாழ்த்துகிறேன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: சாதி, மதம் கடந்து தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்தப் பொங்கல் திருநாளில், கட்சி அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன்: பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் வாழ்வில் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்.
இதேபோல, எம்.பி.க்கள் சு.திருநாவுக்கரசர், பாரிவேந்தர், பாமக தலைவர் அன்புமணி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், வி.கே.சசிகலா, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, சமக தலைவர் ரா.சரத்குமார், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தி.தேவநாதன் யாதவ், லோக் தந்திரிக் ஜனதாதள மாநிலப் பொதுச் செயலாளர் என்.கோவிந்தராஜ் உள்ளிட்டோரும் பொங்கல் வாழ்த்து தெரி வித்துள்ளனர்.
ஆளுநர்கள் பொங்கல் வாழ்த்து:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: தமிழ் மக்களின் பெருமையைப் பறைசாற்றும் பண்டிகை பொங்கல். பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரம், பாரம்பரியத்தை நாம் பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். அதேபோல, நமது வீரத்தை ‘ஜல்லிக்கட்டு’ விழாவாகக் கொண்டாடுகிறோம். அறுவடைத் திருநாளில் சூரியக் கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களை வணங்கி,`பொங்கலோ பொங்கல்' என முழக்கமிட்டு மரியாதை செலுத்துவோம்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கும், உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழர்களுக்கும் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் அடையாளம் பொங்கல் விழா. இயற்கையையும், உழவுத் தொழிலையும் போற்றும் பொங்கல் விழா, தமிழரின் மாண்பையும், கலைகளையும் பெருமைப்படுத்தும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மண்ணால் செய்யப்பட்ட பானை, அடுப்புகளை வாங்கி மண்பாண்டத் தொழிலை ஆதரிப்போம். இந்த நன்னாளில் அனைவரது வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, இன்பம், நலம், வளம் பெருக வாழ்த்துகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT