Published : 15 Jan 2023 06:02 AM
Last Updated : 15 Jan 2023 06:02 AM
சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள் திரும்பிவர ஏதுவாக 15,619பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து அரசு பேருந்துகள் மூலமாக சுமார் 5.37 லட்சம் பேர் செல்லக்கூடும் என கணிக்கப்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளைவிட அதிகமாக 16,932 பேருந்துகள் இயக்கப்படும் எனபோக்குவரத்து துறை அமைச்சர்சிவசங்கர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த 12-ம் தேதி முதலே சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. இதற்காக போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
குறிப்பாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள், உதவி மையங்கள், கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. இதை அமைச்சர் சிவசங்கர் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தார். பின்னர், பயணிகளிடம் குறைகளைகேட்டறிந்த அவர், அதிகாரிகளுக்குஉரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அன்று நள்ளிரவில், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டதாக புகார் எழுந்தது. முன்பதிவு செய்து பயணிக்கக்கூடிய பேருந்துகள் மட்டுமே தொடர்ந்துஇயக்கப்பட்டதாகவும் பயணிகள்கூறினர். இதையடுத்து, அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, பேருந்து இயக்கத்தை சரிசெய்தனர்.
அதிகாலையில் கூட்டம்: பொங்கலுக்கு முந்தைய நாள்என்பதால் நேற்று சொந்த ஊர்களுக்கு பயணிக்க அதிகாலை முதலே கோயம்பேட்டில் பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர்.குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு வந்திருந்த பயணிகள் மிகவும் உற்சாகமாக பேருந்துகளில் பயணித்தனர். தென்மாவட்ட பயணிகளுக்காக 3 நடைமேடைகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருந்தன. வடமாவட்டங்களுக்கு செல்வோர் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகளவு இருந்தது.
சென்னையை பொருத்தவரை 6 இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. புறநகரில் உள்ளமக்கள் தாம்பரம், வண்டலூர், கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் அதிகளவு பயணித்தனர். இதனால் அப்பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டது. மேற்கண்ட இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதோடு அங்கு செல்வதற்கு கூடுதல் மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டன.
முக்கிய பேருந்து மற்றும் ரயில் நிலையங்களை அடையும் வகையில் நேற்று இரவு 12 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. ஆம்னி பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. பெரும்பாலானோர் முன்பதிவு செய்து வந்து பயணித்தனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் அடங்கிய குழுக்கள் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு, அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பி அளித்ததோடு, விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதமும் விதித்தனர்.
ரயில்களைப் பொருத்தவரை 24 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. கடந்த 3 நாட்களுமே சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டது.
கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் நெரிசலை தவிர்க்கும் வகையில், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைதவிர்த்து, திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லஅறிவுறுத்தப்பட்டனர். கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்துகளும் வெளிவட்டச் சாலை வழியாக இயங்கியதால் நெரிசல் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது.
இவ்வாறு கடந்த மூன்று நாட்களில் அரசு பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 5 லட்சம் பேர்,ரயில்களில் 3 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 1.50 லட்சம் பேர் எனவும், சொந்த வாகனங்களில் சென்றவர்கள் என சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.
15,619 பேருந்துகள்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றவர்கள் திரும்பி வருவதற்கு ஏதுவாக ஜன.16 முதல்18-ம் தேதி வரையிலான நாட்களில்15,619 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, நாளைய தினம் நாள்தோறும் சென்னைக்கு இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,187 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதேபோல, தமிழகத்தின் பிற இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 1,525 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து இயக்கம் குறித்து அறிய மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450 மற்றும் 94450 14436 ஆகிய எண்களை அணுகலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT