Published : 01 Dec 2016 10:16 AM
Last Updated : 01 Dec 2016 10:16 AM

குழந்தைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை இல்லையா?

கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் குழந்தைகளை யார் பராமரிப்பது என்ற கேள்விக்கு விடையாக அமைந்தவை குழந்தை பராமரிப்பு மையங்கள். ஆனால் அடிக்கடி நாம் கேள்விப்படுகிற தகவல்கள் குழந்தை பராமரிப்பு மையங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குறியாக்குகின்றன. சமீபத்தில் நவி மும்பையில் நடந்த சம்பவம், கொடுமையின் உச்சம்.

நவி மும்பை பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் விடப்பட்ட தங்கள் 10 மாத மகளைத் திரும்ப அழைப்பதற்காகச் சென்றபோது, குழந்தையின் நெற்றியில் காயம் இருந்திருக்கிறது. காவல்துறை உதவியோடு அந்த மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. பராமரிப்பு மையத்தில் குழந்தை களைக் கவனித்துக்கொள்ளும் பெண் ஊழியர், குழந்தையைக் கடுமையாக அடித்தும் தூக்கியெறிந்தும் துன்புறுத்தியிருக்கிறார். தங்கள் குழந்தைகளை ஓரளவுக்குப் பொறுப்புடன் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தானே பலரும் குழந்தை பராமரிப்பு மையங்களை நாடுகிறார்கள்?

குழந்தை பராமரிப்பு மையங்களின் கவனக்குறைவுகளை வேறுவழியில்லாமல் சகித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி.

“சின்னவனுக்கு நாலு வயசா குது. ரெண்டு மாசத்துக்கு முன்னால டே கேர் சென்டர்-ல இருந்து போன் வந்தது. போய் பார்த்தா அவன் கால் லேசா வளைஞ்சிருந்தது. என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு சரியான பதில் இல்லை. எனக்கு வந்த கோபத்துல அவங்களைத் திட்டிட்டு, குழந்தையை டாக்டர் கிட்டே கூட்டிட்டுப் போனேன். கால்ல லேசான எலும்பு முறிவு. அந்தச் சம்பவத்துக்கு அப்புறம் குழந்தைகளை வேற ஒரு சென்டர்ல சேர்த்திருக்கோம். எங்களை மாதிரி ஆளுங்களுக்கு இந்த மாதிரி சென்டர்களை விட்டா வேற வழியில்லை” என்று வருத்தத்தோடு சொல்கிறார் அவர்.

“ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்ததற்காக எல்லா டே கேர் சென்டரையும் சந்தேகப்படக் கூடாது” என்று சொல்கிறார் சென்னையில் குழந்தைகள் பராமரிப்பு மையம் நடத்திவரும் ப்ரியா சக்திவேல்.

“குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை முழுக்க முழுக்க அட்டெண்டர்களிடம் விடு வது தவறு. வேலை பார்க்கும் பெண்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் குழந்தை களைக் கவனித்துக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. அவர் களும் பல்வேறு மன அழுத்தங் களோடு வேலை பார்க்கிறபோது அந்தக் கோபத்தைக் குழந்தைகள் மீது வெளிப்படுத்தக்கூடும். அத னால் குழந்தைகளைப் பராமரிக்க சரியான நபர்களைத் தேர்வுசெய்ய வேண்டும்” என்கிறார் ப்ரியா.

அரசின் பங்கு என்ன?

லட்சக்கணக்கான பெண்கள் வேலைக்குப் போகும் நம் நாட்டில் அவர்களின் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பும் கடமை யும் அரசாங்கத்துக்கு உண்டு. ஆனால் இங்கே குழந்தை பராமரிப்பு மையங்கள் குறித்து இதுவரை எந்தவொரு சட்டமும் இயற்றப்படவில்லை என்று தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொள்கிறார் வழக்கறிஞர் அஜிதா.

“யார் வேண்டுமானாலும் குழந்தை பராமரிப்பு மையங்களை ஆரம்பித்து நடத்தலாம் என்ற நிலையில் அரசு விழிப்புடன் செயல்பட வேண்டாமா? முதலில் இதுபோன்ற குழந்தை பராமரிப்பு மையங்கள் அனைத்தையும் அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். சாலையோர டீக்கடை, உணவகம் போன்றவற்றின் சுகாதாரத்தைப் பரிசோதிக்கக்கூட அரசு சார்பில் பரிசோதகர்கள் இருக் கும்போது, குழந்தைகள் சாப்பிடும் உணவு, அந்த இடத்தின் சுகாதாரம் இவற்றையெல்லாம் கவனிக்காமல் விட்டுவிட முடியுமா?” என்று கேட்கும் அஜிதா, பெற்றோரின் பங்களிப்பும் இதில் அவசியம் என்கிறார்.

தனித் தீவா நாம்?

குழந்தை வளர்ப்பில் கடந்த தலைமுறை இத்தனை நெருக்கடிகளைச் சந்திக்கவில்லை. இன்று நான்கு பேர் கொண்ட குடும்பமே கூட்டுக் குடும்பம் என்று சொல்கிற அளவுக்கு மனித மனங்கள் சுருங்கிவிட்டன. உறவு முழுவதையும் ஒரே வீட்டில் வைத்து கொண்டாடத் தேவையில்லை. குறைந்தபட்சம் பெற் றோரையாவது உடன் வைத்துக் கொள்ளலாமே. அவர்களால் குழந்தைகளைப் பராமரிக்க முடியாதபோது துணைக்கு ஒரு ஆள் வைத்துக்கொள்ளலாம். குழந்தை பராமரிப்பு மையங்களுக்குக் கொடுக்கிற பணத்தை அவருக்குக் கொடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x