Last Updated : 15 Jan, 2023 07:17 AM

1  

Published : 15 Jan 2023 07:17 AM
Last Updated : 15 Jan 2023 07:17 AM

தேவகோட்டை | 2 பெண்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த சம்பவம்: திருமணம் தடைபடாமல் இருக்க 14 கிராம மக்கள் உதவிக்கரம்

கண்ணங்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற 14 கிராமங்களின் தலைவர்கள் மற்றும் உயிரிழந்த 2 பெண்களின் உறவினர்கள்.

தேவகோட்டை: தேவகோட்டை அருகே மகள், தாயாரை கொன்றுவிட்டு திருமண நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் திருமணம் தடைபடாமல் இருக்க 14 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையைச் சேர்ந்தவர் குமார் (40). மலேசியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வேலுமதி (35), மகன் மூவரசு(12), மாமியார்கனகம்பாள் (65) ஆகியோர் கண்ணங்கோட்டை வீட்டில் வசித்து வந்தனர்.

கனகம்பாளின் மூத்த மகள் வழி பேத்தி திருமணத்துக்காக 46 பவுன் நகைகளை வாங்கி வீட்டில் வைத்திருந்தனர். கடந்த 10-ம் தேதி இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், கனகம்பாள், வேலுமதி, மூவரசு ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு, பீரோவில் இருந்த 46 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதில் சம்பவ இடத்திலேயே வேலுமதிஉயிரிழந்தார். தேவகோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கனகம்பாள் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இருவரின் உடல்களும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்யாததைக் கண்டித்து இருவரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று கண்ணங்கோட்டையில் 14 கிராமங்களின் தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் எம்.எல்.ஏ. செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி, அமமுக மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் அசோகன் மற்றும் சமுதாயத் தலைவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதால் திருமணம் தடைபடாமல் இருக்கசம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு பணம்,நகை உதவி செய்வது எனவும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் பிப்.1-ம் தேதி போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சிறுவனுக்கு மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும்.

குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும், மலேசியா நாட்டில் இருந்து வர முடியாமல் தவிக்கும் வேலுமதியின் கணவர் குமார், கனகம்பாளின் மகன் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தமிழகத்துக்கு வர உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அமைச்சர். ஆட்சியர் ஆறுதல்: உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து 2 பேரின் உடல்களையும் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். இதனிடையே, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினர். இதுதொடர்பாக அமைச்சர் கூறும்போது, “குற்றவாளிகளை பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்றார்.

முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி கூறும்போது, “குற்றவாளிகளை 15 நாட்களுக்குள் கைது செய்யாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும். கண்ணங்கோட்டை பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும். தேவகோட்டையில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. அதை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x