Published : 14 Jan 2023 09:20 PM
Last Updated : 14 Jan 2023 09:20 PM

பெண்ணுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்க மறுத்த போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அபராதம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நிரந்தர பணியாளர் அல்ல எனக் கூறி பெண்ணுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்க மறுக்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு போக்குவரத்துக் கழக உதவிப் பொறியாளருக்கு மகப்பேறு பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலத்தில் உதவிப் பொறியாளராக தற்காலிக அடிப்படையில் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்ட ராஜேஸ்வரி, கருவுற்றிருந்த நிலையில், மகப்பேறு விடுப்பில் சென்றார். விடுமுறை வழஙகிய போக்குவரத்துக்கழகம், நிரந்தர பணியாளர் அல்ல எனக் கூறி, மகப்பேறு சலுகைகளையும், பலன்களையும் வழங்க மறுத்து விட்டது.

இதை எதிர்த்து ராஜேஸ்வரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பேறு கால பலன்களை நான்கு வாரங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து போக்குவரத்துக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் முகமது சஃபீக் அமர்வு, மகப்பேறு என்பது பெண்ணுக்கு மறுபிறப்பு என்பதையும், பிரசவிக்கும் பெண்ணுக்கு 20 எலும்புகள் ஒரே நேரத்தில் உடைவதைப் போன்ற வேதனை ஏற்படும் எனவும், அதை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், பெண்களின் மேம்பாட்டுக்காக மத்திய – மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை கட்டுப்பாடு இல்லாமல் அமல்படுத்த வேண்டுமே தவிர, சாதாரண காரணஙகளுக்காக அந்த திட்டங்கள் அமல்படுத்துவதற்கு தடையாக இருக்கக் கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கணவன் குடும்பத்துக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் பெண்கள், கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், போக்குவரத்துக்கழகத்தின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்ததுடன், நான்கு வாரங்களில் ராஜேஸ்வரிக்கு மகப்பேறு பலன்களை வழங்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக வசூலிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x