Published : 14 Jan 2023 03:31 PM
Last Updated : 14 Jan 2023 03:31 PM
புதுச்சேரி: அரசு செயல்படுத்துகின்ற திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் புதுச்சேரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்கும் விழா முத்திரையர்பாளையம் வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு 552 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.39.5 லட்சம் மதிப்பிலான 886 உதவி உபகரணங்களை வழங்கினார். இதேபோல் புதிதாக முதியார் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 16,769 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலமாக முதற்கட்டமாக தட்டாஞ்சாவடி, இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறும் ஆணையையும் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இவ்விழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் ஏகேடி. ஆறுமுகம், கேஎஸ்பி. ரமேஷ், எம்பி செல்வகணபதி மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, ''புதுச்சேரியில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1,64, 847 பயனாளிகள் பயன்பெற்று வந்த நிலையில், கடந்த 2021 ஜனவரி முதல் ஆகஸ்ட் 2022 வரை நிலுவையிலுள்ள 16,769 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இம்மாதம் முதல் பயன்பெற இருக்கின்றனர்.
முதற்கட்டமாக தட்டாஞ்சாவடி, இந்திரா நகர் தொகுதி பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கி தொடங்கியுள்ளோம். அதன்படி மொத்தம் 1,81,616 பயனாளிகள் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் மூலமாக இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள். புதுச்சேரியில் மட்டும் தான் குறைந்த அளவு ஊனத்தின் தன்மை உள்ளவர்களுக்கும் நாம் உதவித்தொகை கொடுக்கின்றோம்.
நம்முடைய அரசானது ஏழை, எளிய மக்களுக்கும், முடியாதவர்களுக்கும் தேவையான உதவியை செய்கின்ற நிலையில் முடிவுகள் எடுத்து செயல்படுத்தி வருகின்றது. மேலும் நமது அரசானது என்னன்ன திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் இருந்ததோ அத்தனை திட்டங்களையும் இப்போது செயல்படுத்துவற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றது.
கடந்த சட்டப்பேரவையில் என்ன சொல்லியிருந்தோமோ அவற்றை ஒவ்வொன்றாக செயல்படுத்த தொடங்கியிருக்கின்றோம். குறிப்பாக மாணவர்களுக்கான இலவச லேப்டாப், சைக்கிள் வழங்கும் திட்டங்களை இம்மாதம் தொடங்க இருக்கின்றோம். அதேபோன்று புதிய திட்டமான எந்த ஒரு அரசு உதவியும் பெறாத குடும்பத் தலைவிளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தையும் விரைவில் தொடங்க உள்ளோம்.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் சமூக வலூவூட்டல் முகாம் இங்கு நடக்கிறது. இதில் 552 மாற்றுத்திறனாளிகளுக்கு 886 செயற்கை உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இதுபோன்று நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் கொடுக்கப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபான்று வங்கிகள் எல்லாம், தொழில் தொடங்க முயற்சி செய்கின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி வழங்கி அவர்களின் வருமானத்தை ஈட்டுவதற்கான வழியை காட்ட முன்வர வேண்டும். நம்முடைய அரசு புதுச்சேரி மாநில மக்களுக்குரிய திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி, உள்கட்டமைப்புகளை எல்லாம் மேம்படுத்தி புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டு வரவேண்டும் என்று தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
புதுச்சேரி மாநிலம் கல்வி, சுகாதாரத்தில் முதலிடத்தில் இருக்கின்றது. இது இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். மேலும் பல துறைகளில் நாம் முதலிடத்தை பெற வேண்டும். ஆதலால் நம்முடைய அரசு செயல்படுத்துகின்ற திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT