Published : 14 Jan 2023 12:43 PM
Last Updated : 14 Jan 2023 12:43 PM

போகிப் பண்டிகை: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னையில் போகியால் ஏற்பட்ட காற்று மாசு

சென்னை: போகிப் பண்டிகை கொண்டாட்டத்திற்காக பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்து வருவதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஒவ்வோர் ஆண்டும் போகி பண்டிகையின்போது பொதுமக்கள் பொருட்களை எரிப்பதால் காற்று மிகவும் மோசமடைந்து மக்கள் சுவாசிக்க சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, அதிகாலை எரிக்கப்படும் துணிகள், டயர், டியூப், பிளாஸ்டிக் போன்ற நச்சுப் பொருட்களால், காற்றில் நச்சு நுண் துகள்கள் அதிகளவில் படிந்து, காற்று மாசை ஏற்படுத்துகிறது.

அந்தக் காற்றை சுவாசிக்கும் ஆஸ்துமா நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளால் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், புகைமூட்டத்தால் விமான போக்குவரத்து முதல் சாலையோர போக்குவரத்து வரை பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை இன்று (ஜன.14) கொண்டாடப்பட்டுவருகிறது. இதன் காரணமாக சென்னையில் பொதுமக்கள் பொருட்களை எரிப்பதால் காற்று மாசு அதிகரித்துள்ளது.

காலை 11 மணி நிலவரப்படி ஆலந்தூர் காற்று தர கண்காணிப்பு மையத்தில் காற்று தரக் குறியீடு 184 ஆக உள்ளது. அரும்பாக்கம் காற்று தர கண்காணிப்பு மையத்தில் காற்று தரக் குறியீடு 137 ஆகவும், எண்ணூர் காற்று தர கண்காணிப்பு மையத்தில் காற்று தரக் குறியீடு 156 ஆகவும், கொடுங்கையூர் காற்று தர கண்காணிப்பு மையத்தில் காற்று தரக் குறியீடு 161 ஆகவும், மணலி காற்று தர கண்காணிப்பு மையத்தில் காற்று தரக் குறியீடு 148 ஆகவும், பெங்குடியில் காற்று தர கண்காணிப்பு மையத்தில் காற்று தரக் குறியீடு 132 ஆகவும், ராயபுரத்தில் காற்று தர கண்காணிப்பு மையத்தில் காற்று தரக் குறியீடு 121 ஆகவும், வேளச்சேரி காற்று தர கண்காணிப்பு மையத்தில் காற்று தரக் குறியீடு 111 ஆகவும் உள்ளது.

  • தரக் குறியீடு - காற்றின் தரம்
  • 0 - 50 - நல்ல நிலை
  • 50 - 100 - திருப்திகரம்
  • 101 - 200 - மிதமான பாதிப்பு
  • 201 - 300 - மோசம்
  • 301 - 400 - மிகவும் மோசம்
  • 401 - 500 - கடும் பாதிப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x