Published : 14 Jan 2023 04:11 AM
Last Updated : 14 Jan 2023 04:11 AM
சென்னை: மத்திய முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சட்டப்பேரவையின் நிகழ்வுகள் நேற்றைய தினம் தொடங்கும் முன்மத்திய முன்னாள் அமைச்சர் மறைந்த சரத்யாதவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
மத்திய முன்னாள் அமைச்சர் சரத் யாதவுக்கு இரங்கல் தெரிவித்து ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: மத்திய முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். ஓர் ஆற்றல்மிக்க நாடாளுமன்ற உறுப்பினரான அவர், மக்களுக்குச் சேவை செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: சரத் யாதவ் மறைவால் மிகவும் வேதனையடைந்தேன். சோஷலிச இயக்கத்தின் மிக உயரிய தலைவராக விளங்கிய அவர் தனது இறுதி மூச்சு வரையிலும் மக்களாட்சி மற்றும் மதச்சார்பின்மைக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்று கொண்டவராய் திகழ்ந்தார்.
ஜனநாயக ஜனதாதளம் கட்சியின் தமிழக தலைவர் டி.ராஜகோபால்: பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுப்பணிகளில் 27 சதவீதம் இட ஒதுக்கீட்டைப்பெற்றுத் தந்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த ரத யாத்திரை உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தி இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: காங்கிரஸ் கட்சியை எதிர்க்கப் பலரும் அஞ்சிய காலத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து அரசியல் செய்தவர். நாடு தழுவிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையை முழுமையாக ஆதரித்தவர். கடந்த 2000-ல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவராக என்னைத் தேர்ந்தெடுக்க முன்மொழிந்த தேசியத் தலைவர்களில் சரத்யாதவும் ஒருவர்.
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி: சரத்யாதவின் மறைவு சமூகநீதிப் போராட்ட வரலாற்றில் ஓர் ஈடுசெய்ய முடியாத இழப்பு.
பாமக தலைவர் அன்புமணி: சரத்யாதவின் மறைவு சமூகநீதி இயக்கங்களுக்கு பின்னடைவு. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT