Published : 14 Jan 2023 04:25 AM
Last Updated : 14 Jan 2023 04:25 AM
சென்னை: பொங்கல் தினத்தன்று (ஜன. 15) நடைபெற உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளார்க் பணிக்கான முதன்மைத் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் எஸ்பிஐ வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது.
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 5,486 கிளார்க் பணிக்கான முதல்நிலைத் தேர்வு 2022-ல் நடத்தப்பட்டது. இதையடுத்து, அடுத்தகட்ட முதன்மைத் தேர்வு ஜன. 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஜன. 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே, பொங்கலன்று நடைபெறும் எஸ்பிஐ முதன்மைத் தேர்வை, வேறு தேதிக்கு மாற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வட்டார அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி., "தேர்வு தேதியை மாற்ற வேண்டுமென மத்திய நிதி அமைச்சகம், எஸ்பிஐ வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், இதுவரை தேர்வு தேதியை மாற்றவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதும், ஆலோசிக்கிறோம் என்று கூறினார்களே தவிர, தேர்வு தேதியை மாற்ற வங்கி நிர்வாகம் விரும்பவில்லை" என்றார்.
பின்னர், வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் ராதாகிருஷ்ணாவுடன் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தப் பிரச்சினை தொடர்பாக தலைமை அலுவலகத்தில் பேசி, உரிய முடிவு கூறுவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
எனினும், உடனடியாக பதில் தெரிவிக்க வலியுறுத்தி, அவரது அறையில் சு.வெங்கடேசன் அமர்ந்து, உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டம் மாலை வரை நீடித்தது. அப்போது, எம்.பி.க்கள் திருமாவளவன், செல்லக்குமார், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், சு.வெங்கடேசனை நேரில் சந்தித்து, தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT