Published : 14 Jan 2023 03:40 AM
Last Updated : 14 Jan 2023 03:40 AM
சென்னை: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 20 மாத திமுக ஆட்சியில் இமாலய சாதனைகளைப் புரிந்துள்ளோம். தமிழகத்தின் மேன்மை, வளர்ச்சி, செழிப்புக்கு வழிவகுக்கும் ‘திராவிட மாடல்’ கொள்கையின் அடிப்படையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 9 -ம் தேதி பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பைக் காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், பேரவையின் விழுமியங்களைப் போற்றவும் நான் எனது சக்தியை மீறியும் செயல்படுவேன்
பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும் பழுதுபார்ப்பு மானியத்தொகை வரும் நிதியாண்டு முதல் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். வட மாநிலத்திலிருந்து இங்கு வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் சட்டவிரோத செயல்களிலும், குற்றச் செயல்களிலும் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தமுள்ள 234 உறுப்பினர்களில், 233 உறுப்பினர்கள் தேவையான பணிப் பட்டியலை அளித்தனர். மொத்தம் 1,483 பணிகளுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை துறை வாரியாக மதிப்பீடு செய்து, முன்னுரிமை அளிக்க வேண்டிய பணிகளுக்கு வரும் நிதியாண்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, படிப்படியாக அந்தப் பணிகள் நிறைவேற்றப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில், 2020-2021-ல் ரூ.83,275 கோடி கடன் பெறப்பட்டது. அதை திமுக ஆட்சியில் ரூ.79,303 கோடியாகக் குறைத்திருக்கிறோம்.
கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில், முக்கிய ஊராட்சி ஒன்றியச் சாலைகளை வலுப்படுத்தவும், தரம் உயர்த்தவும் `முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும்.
முதல்கட்டமாக 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றியச் சாலைகள், ரூ.4,000 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்படும். முதல்வரின் காலை உணவுத் திட்டம் 2022 செப்டம்பர் 15-ம் தேதி மதுரையில் தொடங்கப்பட்டது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், முதல்கட்டமாக, 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதனால், பள்ளிகளுக்கு வரும் மாணவர் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், தமிழக அரசு இந்த திட்டத்தை 2023-2024-ம் ஆண்டில் விரிவாக்கம் செய்து, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க முடிவு செய்துள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதை அடைய பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்துக்கு கூடுதல் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக வரும் 2024 ஜனவரி 10, 11-ம் நாட்களில் `உலக முதலீட்டாளர்கள் மாநாடு' நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன், பிரம்மாண்டமான முறையில் சென்னையில் இந்த மாநாடு நடத்தப்படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT