Published : 14 Jan 2023 03:56 AM
Last Updated : 14 Jan 2023 03:56 AM

பொங்கல் பண்டிகை களைகட்டியது | சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் - 2 நாட்களில் 7 லட்சம் பேர் வெளியூர் சென்றனர்

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று குவிந்த பொதுமக்கள்.படம்: ம.பிரபு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதையொட்டி, 12, 13, 14-ம் தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளும் சேர்த்து மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையைப் பொறுத்தவரை நேற்று முன்தினம் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 651 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று 1.34 லட்சம் பேர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இதேபோல, சென்னையில் இருந்து நேற்று 1,855 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவற்றில் பயணம் செய்ய காலை முதலே முக்கியப் பேருந்து நிலையங்களுக்கு ஏராளமான பயணிகள் வந்தனர். இதனால் பிரதான சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. பயணிகளைப் பாதுகாப்பாக அனுப்பிவைக்கும் பணிகளில் போக்குவரத்துத் துறையினரும், திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் பணியில் போலீஸாரும் ஈடுபட்டனர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள், கட்டுப்பாட்டு அறை, உதவி மையம் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அதேபோல, மாதவரம், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி பைபாஸ், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்து நிலையங்களை பல்வேறு பகுதிகளுடன் இணைக்கும் வகையில் 340 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதேபோல, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விரைவுப் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து, வெளிவட்டச் சாலை, வண்டலூர், கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்பட்டன.

போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், சென்னை புறநகர் மற்றும் புறவழிச் சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் இருந்தது. குறிப்பாக, ஜிஎஸ்டி சாலை, பெருங்களத்தூர், பரனூர் சுங்கச்சாவடி, வெளிவட்டச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டது. எனினும்,போக்குவரத்து போலீஸாரின் நடவடிக்கையால், பெரிய அளவுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை.

இதேபோல, ஆம்னி பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அதிகம் இருந்தது. பெரும்பாலானோர் முன்பதிவு செய்து பயணித்தனர். எனினும், பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு வாங்குவோரிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

இதுபோன்ற விதிமீறல்களைக் கண்காணிக்க, வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டனர். அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பப் பெற்றுத் தந்ததுடன், விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

சிறப்பு ரயில்கள்: திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்க ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த 2 நாட்களில் ரயில்களில் 2.50 லட்சம் பேர், அரசுப் பேருந்துகளில் 3.50 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் ஒரு லட்சம் பேர் என சுமார் 7 லட்சம் பேர் பயணம் செய்தனர். இதுதவிர, வேன்கள், சொந்த வாகனங்கள் மூலம் சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இன்றும் சிறப்புப் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 1,943 சிறப்புப் பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பயணிப்பதன் மூலம் கடைசிநேர நெரிசலைத் தவிர்க்கலாம் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புகார் தெரிவிக்க…: பேருந்து இயக்கம் குறித்து அறியவும்,புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 என்றஎண்களிலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002, 26280445, 26281611 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x