Published : 10 Dec 2016 12:15 PM
Last Updated : 10 Dec 2016 12:15 PM
ஐக்கிய நாடுகள் சபை வழிகாட்டுதல்படி, பள்ளி மாணவர்களிடையே மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் 250 பள்ளிகளில் மனித உரிமைக் கல்வி ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது.
ஐநா சபை மனித உரிமைப் பிரகடனத்தை வெளியிட்ட நாளான டிசம்பர் 10-ம் நாள் (1948-ம் ஆண்டு) ஆண்டுதோறும் சர்வதேச மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மனித உரிமை என்பது என்ன, எவற்றையெல்லாம் மனித உரிமை மீறலாக கருதலாம் என்பது தொடர்பான போதுமான விளக்கங்கள் இதுவரை பெரும்பான்மையானவர்களைச் சென்றடையவில்லை. மனித உரிமை தொடர்பான கல்வியை அறிமுகப்படுத்துவதன் மூலம், இது சாத்தியமாகும் என்ற ஐநா-வின் எண்ணம் தற்போது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்காசியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தின் சில பள்ளிகளில்தான் 1997-ல் மனித உரிமைக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 250 பள்ளிகளில் மனித உரிமை மன்றங்களை அமைக்கும் பணிகளில் மனித உரிமைக்கல்வி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
மனித உரிமை மன்றங்களை அமைக்க தேர்வு செய்யப்பட்ட, பள்ளிகளில் மனித உரிமைக் கல்வியை கொண்டு செல்ல பள்ளி தலைமையாசிரியருடன் கலந்தாலோசித்து, உள்நெறி யாளராக ஒரு ஆசிரியர் தோ்வு செய்யப்படுவார். 6, 7, 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளைக் கொண்டு மனித உரிமை மாணவர் மன்றம் அமைக்கப்படும். செயல்பாடுகளை பகிர்ந்து செயலாக்கிட ஐந்து துணைக் குழுக்கள் ஏற்படுத்தப்படும்.
மூன்று வகை செயல்பாடு
மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் செ.நடராஜ் கூறியதாவது:
மனித உரிமை மன்றத்தின் செயல்பாடு வகுப்பறை, வளாகம் மற்றும் சமூகத்தை நோக்கிய செயல்பாடு என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. வகுப்பறை செயல்பாடு என்பது மாணவர்களுக்கு மனித உரிமைக்கல்வி ஆசிரியர் மூலமாக பாடமாக நடத்த ஒரு வகுப்பு ஒதுக்கப்படுகிறது.
அடுத்ததாக, மன்ற தொடக்க விழாக்கள், குழந்தை உரிமைகள் தினம், சர்வதேச மனித உரிமைகள் தினம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பள்ளியின் அனைத்து குழந்தைகளையும் பங்கேற்கச்செய்யும் விதத்தில் செயல்படுத்துவதே வளாகச்செயல்பாடாகும்.
பள்ளி வளாகத்தைவிட்டு மாணவர்களை சமூகத்துக்கு அழைத்துச்செல்ல கிராமச் சுற்றுலா நிகழ்ச்சி மாதமொருமுறை நடத்தப்படும். இந்நிகழ்வினை சமூகத்தை நோக்கிய செயல்பாடு என்றழைக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 20 பள்ளிகள், திருப்பூர், கோவையில் தலா 15 பள்ளிகள் என மொத்தம் 50 பள்ளிகளில் மனித உரிமை மன்றங்கள் செயல்படுகின்றன. மனித உரிமை கல்விக்கான பாடத்திட்டங்கள் ஐநா-வின் வழிகாட்டுதல் படி மனித உரிமை கல்வி நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு செயல் படுத்தப்படவுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT