Published : 24 Dec 2016 03:04 PM
Last Updated : 24 Dec 2016 03:04 PM
புதுச்சேரி என்றவுடன் பலருக்கு நினைவுக்கு வருவது மதுதான். சுற்றுலா இடங்களில் தனித்த அடையாளத்தை பெற்றுள்ள புதுச்சேரியில் பெரிய நகரங்களில் கிடைக்கக் கூடிய பிரபல பிராண்டு கள் முதல் அனைத்து ரக மதுக் களும் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து புதுச் சேரிக்கு வந்து மது குடித்து விட்டு செல்வோர் எண்ணிக்கையும் அதிகம்.
இதனால் புதுச்சேரி அரசுக்கும் கலால் துறை மூலம் அதிக வருவாயும் கிடைக்கிறது. குறிப்பாக, கடந்த 2015-16-ம் ஆண்டு ரூ.630 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.673.75 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பாண்டில் (2016-17) ரூ.775 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ரூ.458 கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில் பொது நலன் கருதி நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்படக்கூடிய மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் மதுவிற்பனைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசின் வருவாய் குறையும் நிலையும் உள்ளது.
தற்போது புதுச்சேரி மாநிலத்தில் மொத்த விற்பனை மது கடைகள் - 89. சில்லரை விற்பனை மற்றும் பார்கள் - 279. சுற்றுலா துறை யின் கீழ் அனுமதியுடன் இயங்கும் மதுக்கடைகள் - 96 என மொத்தம் 464 கடைகள் உள்ளன. குறிப்பாக, புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் மொத்த விற்பனை மதுக்கடைகள் - 41, சில்லரை விற்பனை மதுக்கடைகள் -185, சுற்றுலா துறை அனுமதியுடன் இயங்கும் மதுக்கடைகள் 86 என மொத்தம் 312 அரசு மற்றும் தனியார் மதுக்கடைகள் உள்ளன. இதேபோல் புதுச்சேரி பிராந்தியத்தில் 95 சாராயக் கடைகள், 70 கள்ளுக்கடைகள் உள்ளன.
இவற்றில் பெரும்பாலான மதுக் கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுங்சாலைகளில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தர வால் மதுக்கடைகளை இடமாற்ற வேண்டிய கட்டாயத்தில் புதுச்சேரி அரசு இருக்கிறது. இதனால் புதுச்சேரியில் இயங்கி வந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை தற்காலிகமாக குறையும் சூழல் உருவாக்கியுள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் மதுக்கடைகள் எவை என்று கலால் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து கலால்துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதுச்சேரியில் இந்திராகாந்தி சிலை சந்திப்பில் இருந்து கோரிமேடு வரையும், இந்திரா காந்தி சிலை சந்திப்பில் இருந்து மதகடிப்பட்டு வரையும், இந்திரா காந்தி சிலை சந்திப்பில் இருந்து முள்ளோடை வரையும் தேசிய நெடுஞ்சாலையாக கண்டறியப் பட்டுள்ளது.
மேலும் எந்த பகுதியெல்லாம் மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்டு வருகிறது என்பது குறித்த விவரங் களை பொதுப்பணித்துறையிடம் கேட்டுள்ளோம். அவர்கள் அதனை தருவதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் மதுக்கடைகளின் முழு விவரம் தெரிய வரும்.
தற்போதைய கணக்கீட்டின்படி புதுச்சேரி மாநிலம் முழுவதும் 150 மதுக்கடைகள் அகற்றப்படும் என தெரிகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவு படி அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரை காலக்கெடு உள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
மதுக்கடைகள் மூடுவது தொடர் பாக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூடி முடிவு எடுப்பார்கள். அந்த முடிவின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் கண்டறியப் படும் மதுக்கடைகளுக்கு மூடவும், இடமாற்றம் செய்யவும் நோட்டீஸ் வழங்கப்படும்.
மதுக்கடை உரிமையாளர்கள் கடைகளை மாற்ற தேர்வு செய்யும் இடத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இடமாற்றம் செய்யப்படும் மதுக்கடைகள் குடியிருப்பு பகுதி, கோயில், பள்ளி அருகே அமைக் கவோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைந்தாலோ அவற்றை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பாதிப் பில்லாத இடங்களில் அமைக்க அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT